பொது

ஈகைத் திருநாள்: ஏழை, எளிய மக்களையும் அரவணைப்போம்

20/03/2026 07:41 PM

கோலாலம்பூர், 20 மார்ச் (பெர்னாமா) -- ரமலான் மாதத்தின் இறுதி நோன்பு நாள் என்பது இறை பக்தி, சுய ஒழுக்கம் மற்றும் மன்னிப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

மனிதனின் பாவங்களை நோன்பு காலத்திற்கு பின்னர், பெருநாளில் இறைவன் மன்னிப்பதாகவும், அதிலும் அவருக்கு ஒரு கணக்கு உள்ளதாகவும்  இஸ்லாமிய பேச்சாளரும் எழுத்தாளருமான உஸ்தாத் கம்பம் பீர் முகமது தெரிவித்தார். 

எனவே, ஈகைத் திருநாளின் மகத்துவம் அறிந்து ஏழை, எளிய மக்களையும் மறவாமல், அவர்களுக்கும் உதவிகள் செய்து, இப்பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று உஸ்தாத் கம்பம் பீர் முகமது கேட்டுக்கொள்கிறார்.

நோன்பு பெருநாள் வெறுமனே கொண்டாட்டத்தை மட்டும் முன்னிறுத்தவில்லை, மாறாக, அது நோன்பு நோற்ற ஒருவருக்கு அடுத்த 11 மாதங்களை கடப்பதற்கான பயிற்சியும் வழிகாட்டியும் வழங்குவதாக உஸ்தாத் கம்பம் பீர் முகமது தெரிவித்தார்.

பெருநாளின் முதல் காலையை பேரிச்சம் பழம் உண்டு தொடங்குவது வழக்கம் என கூறிய அவர், மகிழ்ச்சி நிறைந்த அந்த தருணத்தில்  அண்டை அயலாரையும்  அழைத்து, அவர்களுடன் அன்பு பாராட்டி பெருநாள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றார். 

எல்லா மதமும் மனிதரை நேசியுங்கள் என்று உபதேசிப்பதால், அன்பு மலரவும்,  அறம் பெருகவும், மனிதநேயம் தழைக்கவும், நாட்டு மக்கள் இது போன்ற பெருநாள் காலங்களில் ஒற்றுமையையும் நல்லிணக்கதையும் பேண வேண்டும் எனவும் பீர் முகமது கேட்டுக்கொண்டார். 

நோன்பின் மாண்பு மற்றும் பெருநாளின் அர்த்தம் குறித்து பெர்னாமா செய்திகளுக்கு வழங்கிய சிறப்பு நேர்க்காணலில் அதனைத் தெரிவித்த அவர் அனைவருக்கும் தமது ஈகைத் திருநாள் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொண்டார்.

-- பெர்னாமா