பொது

எண்ணெய் விலைப் பிரச்சனையை அரசியலாக்கும் தரப்பினர் - பிரதமர் சாடல்

20/03/2026 05:11 PM

புக்கிட் மெர்தாஜாம், 20 மார்ச் (பெர்னாமா) -- நாட்டின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட, அனைத்துலக மோதலால் நெருக்கடி ஏற்பட்டிருந்தாலும், உயர்ந்து வரும் உலகளாவிய எண்ணெய் விலைப் பிரச்சனையை அரசியலாக்கும் சில தரப்பினரின் நடவடிக்கைகளை, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடினார்.

மேற்கு ஆசியாவில் தாக்குதல்கள் மற்றும் நெருக்கடிகள் உள்ளடக்கிய புவிசார் அரசியல் பதற்றங்களை உலகம் எதிர்நோக்கியிருக்கும் நிலையில், அச்சூழலின் உண்மையான யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல், அரசாங்கத்தை தொடர்ந்துக் குறைச் சொல்லும் தரப்பினர் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

''பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, எண்ணெய் விலை தேக்கமடைந்துள்ள இந்தச் சூழ்நிலையை இன்னும் சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது நமது தவறல்ல. ஆனால், இது ஒரு உலகப் போர் காலப் பிரச்சனை. ஆனாலும், தற்போதைய சூழலில் சில எதிர்க்கட்சியினர் நம்மை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல் உலகம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மேலும், ஒரு தீர்வைக் காண அனைவரும் ஒன்றிணைய வேண்டும்,'' என்றார் அவர்.

இன்று, புக்கிட் மெர்தாஜாமில், பெர்மாத்தாங் பாசிர் பொது மண்டபத்தில் நடைபெற்ற பெர்மாத்தாங் பாவ் மக்களுடனான ரமலான் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.

ஈரான் சம்பந்தப்பட்ட தாக்குதல்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலமான பதிலடித் தாக்குதல்கள் உள்ளிட்ட அதிகரித்து வரும் பதற்றங்கள், ஹொர்முஸ் நீரிணை உட்பட எண்ணெய் மற்றும் எரிவாயு வசதிகளைப் பாதித்து, உலக எண்ணெய் விலைகள் கடுமையாக உயரக் காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)