கோலாலம்பூர், மார்ச் 25 (பெர்னாமா) -- சட்ட நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் குறிப்பாகப் பெரிய அளவிலான குற்றக் கும்பல்கள் சம்பந்தப்பட்ட அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் விவகாரங்களில் செல்வாக்குமிக்க தரப்பினர் யாரும் தலையிடக் கூடாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செல்வாக்கு மிக்க தனிநபர்கள் அல்லது குழுக்களை பாதுகாக்க முயற்சிக்கும் சில தரப்பினரின் போக்கு, சட்டத்தை அமல்படுத்தும் போலீஸ் படையின் பணியை மேலும் கடினமாக்கியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
"செல்வாக்கு மிக்கவர்களை பாதுகாக்கும் சிலரை நான் சில சமயங்களில் வெறுக்க தொடங்கி விடுகிறேன். இது பி.டி.ஆர்.எம்-இன் பணியைக் கடினமாக்குகிறது. அவர்கள் சில சமயங்களில் புகார் கூறுகிறார்கள். நாம் ஒரு தெளிவான செய்தியை வழங்கினால், இந்த நாடு அமைதியாகவும், துணிச்சலாகவும் இருக்கும் என்பதை நம்புங்கள். எந்தக் குழுவிலிருந்து வந்தாலும் நடவடிக்கை உறுதியாக இருக்க வேண்டும். மேலும் பி.டி.ஆர்.எம் மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கையைத் தடுக்க எந்தத் தலையீடும் இருக்கக்கூடாது," என்றார் அவர்.
இன்று, கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையம் பூலாபோலில் நடைபெற்ற 219-வது போலீஸ் தினக் கொண்டாத்தில் உரையாற்றிய பிரதமர் அவ்வாறு கூறினார்.
அதோடு, பல தசாப்தங்களாக சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பியிருந்த சட்டவிரோதக் கும்பல்கள் மற்றும் பெரும் ஊழல்வாதிகள் மீது, தற்போது மிகவும் தீவிரமான நடவடிக்கை எடுத்து வரும் பி.டி.ஆர்.எம்-இன் துணிச்சலுக்கும் அன்வார் பாராட்டு தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)