கோலாலம்பூர், மார்ச் 25 (பெர்னாமா) -- போலீஸ் படையினரின் பணி என்பது தொழிலாக மட்டுமின்றி அது நாட்டிற்கான பெரும் நம்பிக்கையாகவும் விளங்குகிறது.
நாட்டின் அமைதியும் ஒழுங்கும் பேணப்படுவதை உறுதி செய்வதற்காக அரச மலேசிய போலீஸ் படை பி.டி.ஆர்.எம் பணியாளர்கள், நேரம் காலம் பாராமல் கடமையாற்ற எப்போதும் தயாராக இருப்பதை உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃசைப்புடின் நசுத்தியோன் இஸ்மாயில் வெகுவாகப் பாராட்டினார்.
மக்களுக்கும் நாட்டிற்கும் ஆற்றிய சேவை மற்றும் தியாகங்களுக்காக அனைத்து பி.டி.ஆர்.எம் உறுப்பினர்களுக்கும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்வதாகவும் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்
இதனிடையே, மக்கள் தங்கள் குடும்பங்களுடன் விடுமுறையைக் கழிக்கும் பெருநாள் காலங்கள் உட்பட எத்தருணங்களையும் பொருட்படுத்தாமல் கடமையாற்றும் போலீஸ் படையினரின் அர்ப்பணிப்பை துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப் பாராட்டியுள்ளார்.
அதேபோல, போலீஸ் படையினரின் நல்வாழ்விற்காகவும் குறிப்பாக கடமையில் ஈடுபட்டிருக்கும் தருவாயில் அவர்களின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்வதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஃஹ்மி பாட்சிலும் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
219-வது போலீஸ் தினத்தை முன்னிட்டு கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோவும் முகநூலில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)