கோலாலம்பூர், 26 மார்ச் (பெர்னாமா) -- Budi Madani RON95 அல்லது BUDI95 திட்டத்திற்கான தகுதி உச்சவரம்பை, மாதத்திற்கு 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராக அரசாங்கம் சீரமைக்கும்.
எண்ணெய் விநியோகம் மற்றும் உலகப் பொருளாதாரம் மீட்சி பெறும் வரையில், ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கி அமலுக்கு வரும் இந்தப் புதிய விகிதம் நிர்ணயிக்கப்படுவதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
''எனவே, 2026ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கி, BUDI95 பெறுவதற்கான தகுதியை மாதத்திற்கு 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராக அரசாங்கம் மாற்றியமைக்கும். மேலும், இந்த நடவடிக்கை நிச்சயமாக ஒரு தற்காலிகமானதே; எண்ணெய் நிலவரம், எண்ணெய் விநியோகம் மற்றும் உலகப் பொருளாதாரம் மீட்சி பெறும் வரை இது தொடரும். ஆனால், அதற்கான அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை. எனவே, மக்களின் சுமையைக் குறைக்க, BUDI95 லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென் என்ற விலையிலேயே தொடரும் என்பதை நான் வலியுறுத்துகிறேன்,'' என்றார் அவர்.
வியாழக்கிழமை தமது முகநூலின் வழி வழங்கிய சிறப்பு செய்தியின்போது அன்வார் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும், பணிப் பொறுப்புகளைக் கருத்தில் கொண்டு, இ-ஹெய்லிங் மற்றும் கிக் பணியாளர்களுக்கான உச்சவரம்பான மாதத்திற்கு 800 லிட்டர் நீட்டிக்கப்படுவதாகவும் அவர் விவரித்தார்.
அதுமட்டுமின்றி, எரிபொருளின் விலை கடுமையாக உயர்ந்திருந்தாலும், சபா மற்றும் சரவாக் மாநிலங்கள் லிட்டருக்கு இரண்டு ரிங்கிட் 15 சென் என்ற உத்வித்தொகை விலையில் டீசலைத் தொடர்ந்து பெறவிருக்கின்றன.
இரு மாநிலங்களின் புவியியல் மற்றும் உபகரண நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதே வேளையில், நாட்டில் எரிபொருள் கசிவு பிரச்சனைக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, எண்ணெய் விநியோகம் மற்றும் உலகப் பொருளாதாரம் மீட்சி பெறும் வரையில், அரசு ஊழியர்களைப் கட்டம் கட்டமாகவும் தேவைக்கேற்பவும் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிப்பது போன்ற பல கூடுதல் நடவடிக்கைகளையும் அரசாங்கம் பரிசீலித்து வருவதை அன்வார் சுட்டிக்காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)