பொது

மாணவர்களின் கல்விச் சுமை 50 விழுக்காடு குறைந்துள்ளது

09/09/2024 03:39 PM

புத்ராஜெயா, 09 செப்டம்பர் (பெர்னாமா) -- இவ்வாண்டு மார்ச் மாதம், கல்வி அமைச்சு மேற்கொண்ட பள்ளி பாடத் திட்ட தலையீட்டு நடவடிக்கை மூலம் மாணவர்களின் கல்விச் சுமை 50 விழுக்காடு குறைந்துள்ளது.

அறிவியல், கணிதம் போன்ற முக்கிய பாடங்களின் கற்றல் தரநிலைகள் சிலவற்றையும், அதன் உள்ளடக்கத்தையும் ஒன்றிணைக்கும் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டதால் இது சாத்தியமானதாக கல்வி தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் தெரிவித்தார்.

''அதை ஒன்றிணைக்கும் போது, பள்ளி பாடத்திட்டம் உட்பட மேலும் சில அம்சங்களில் ஏற்படும் நெருக்கடியைக் குறைக்க முடிகின்றது. அதோடு, சில கற்றல் தரநிலைகளையும் அதன் உள்ளடக்கங்களையும் இரண்டாம் ஆண்டிலும் பயன்படுத்தவிருக்கிறோம். அப்பாடத்திட்டம் மூலம் மாணவர்கள் திறமை அடையும் போது, முதற்கட்டமாக நாங்கள் இரண்டாம் ஆண்டிற்குக் கொண்டு செல்கிறோம். அதாவது, நடப்பிலுள்ள பாடத் திட்டத்தில் கற்றல் தரநிலை மற்றும் உள்ளடக்க தரநிலை தொடர்பில் 50 விழுக்காடு குறைக்க முடியும்,'' என்றார் அவர்.

பள்ளி பாடத் திட்டத்தில் முறையான மேம்பாட்டு செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டாலும், தங்கள் பிள்ளைகளின் வயதைக் கருத்தில் கொண்டு அவர்கள் எதிர்நோக்கும் சிரமம் குறித்து பெற்றோர்கள் வருந்துவதை அஸ்மான் அட்னான் சுட்டிக்காட்டினார்.

நடப்பிலுள்ள பாடத் திட்டத்தை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கும் ஆசிரியர்களுக்கு, புதிய பாடத் திட்ட சீரமைப்பு ஆவணம் ஒன்றை கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502