விளையாட்டு

2024 அமெரிக்க பொது டென்னிஸ் பட்டத்தை வென்றார் சின்னர்

09/09/2024 05:17 PM

அமெரிக்கா, 09 செப்டம்பர் (பெர்னாமா) --  2024 அமெரிக்க பொது டென்னிஸ் பட்டத்தை வென்றதன் மூலம் தமது இரண்டாவது கிராண்ட்ஸ்லாமைக் கைப்பற்றி இருக்கின்றார் இத்தாலியின் ஜன்னிக் சின்னர்.

டென்னிஸ் உலகின் முதன்நிலை வீரரான அவர், இவ்வாண்டு ஜனவரியில் ஆஸ்திரேலிய பட்டத்தை வென்று முதலாவது கிராண்ட்ஸ்லாமை வென்றார்.

இன்று அதிகாலை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், 23 வயதுடைய ஜன்னிக் சின்னர் 6-3, 6-4 மற்றும் 7-5 என்ற நிலையில் உபசரணை நாட்டின் டெய்லர் ஃபிரிட்சைத் தோற்கடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஒரே பருவத்தில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க பட்டங்களைப் பெற்ற நான்காவது டென்னிஸ் வீரர் என்ற சாதனையை ஜன்னிக் சின்னர் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர், சுவீடனின் மேட்ஸ் விலாண்டர், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மற்றும் செர்பியாவின் நோவாக் ஜோகோவிக் ஆகிய மூவர் ஒரே பருவத்தில் அத்தகையச் சாதனையைச் செய்தனர்.

மேலும் அமெரிக்க பட்டத்தை வென்ற முதல் இத்தாலிய டென்னிஸ் வீரர் என்ற சாதனையையும் ஜன்னிக் சின்னர் செய்துள்ளார்.

இவ்வாண்டில், தாம் களமிறங்கிய 60 போட்டிகளில் 55 வெற்றிகளையும், ஐந்து தோல்விகளையும் சின்னர் சந்தித்துள்ளார்.

ரோஜர் பெடரர், நோவாக் ஜோகோவிக் மற்றும் ரஃபாயல் நடால் ஆகிய மூன்று ஜாம்பவான்களுக்கு அடுத்து சின்னர் டென்னிஸ் உலகின் புதிய நட்சத்திரமாக உருவாகி இருக்கிறார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)