அலோர் ஸ்டார், 27 பிப்ரவரி (பெர்னாமா) -- கடந்த புதன்கிழமை கெடா, புக்கிட் காயு ஹீதாமில் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் கமாண்டர் வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தாய்லாந்து பெண் ஒருவர் உட்பட எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புக்கிட் காயு ஹீதாம் மற்றும் பெர்லிஸ், பாடாங் பெசார் ஆகிய இடங்களில் சம்பவத்தன்று காலை மணி 10.30 தொடங்கி மாலை மணி 6 வரை மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கைகளில் 22 முதல் 52 வயதிற்குட்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக கெடா போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்தார்.
ஆறு ஆண்களும் சந்தேக நபர்களில் ஒருவரின் மனைவியான ஒரு பெண்ணும் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் வசித்து வந்ததொடு ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், நான்கு சந்தேக நபர்கள் மீது ஏற்கனவே கடுமையான குற்றங்கள் பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அட்ஸ்லி அபு தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை கெடா, போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
மேல் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் இரண்டிலிருந்து நான்கு நாள்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்படும் வேளையில், அந்த 30 வயதுடைய பெண் 14 நாள் தடுப்புக் காவலில் இருப்பார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)