பொது

இயற்கை பேரிடர் ஏற்படும் அபாயத்தில் உள்ள 6,000-க்கும் மேற்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன

09/09/2024 07:09 PM

மாச்சாங், 09 செப்டம்பர் (பெர்னாமா) --  இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் நாடு முழுவதும் வெள்ளம், நிலச்சரிவு உட்பட இயற்கை பேரிடர் ஏற்படும் அபாயத்தில் உள்ள 6,000-க்கும் மேற்பட்ட பகுதிகளை மலேசிய பொது தற்காப்புப் படை கண்டறிந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டு காலமாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை, நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை போன்ற தொழில்நுட்பத் துறைகளால் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் அப்பகுதிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கே கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று,  ஏ.பி.எம் தலைமை ஆணையர் டத்தோ அமிநுரஹிம் முஹமட் தெரிவித்தார்.

இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ள மாநிலங்களில் கிளந்தான், பகாங், திரெங்கானு, பேராக், ஜோகூர் மற்றும் கெடா ஆகிய மாநிலங்கள் அடங்கும் என்று டத்தோ அமிநுரஹிம் முஹமட் தெரிவித்தார்.

''பொதுவாக அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் அவ்விவகாரம் (இயற்கை பேரிடர்) குறித்த தகவல்கள் பகிரப்படும். கோத்தா திங்கியில் அக்டோபடர் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்திற்குத் துணைப் பிரதமர் தலைமை தாங்குவார்'', என்று அவர் கூறினார்.

இன்று, மாச்சாங்கில் நடைபெற்ற கிளந்தான் மாநில ஏ.பி.எம்-இன் சிறந்த ஊழியர்களுக்கான விருதளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், அமிநுரஹிம் செய்தியாளர்களிடம் பேசினார்.

வடகிழக்கு பருவமழையின் போது அரசாங்கம் வழங்கும் உதவியில் இருந்து எவரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)