பொது

மருத்துவர்களிடையே பகடிவதை; விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும்

10/09/2024 05:35 PM

சுங்கை பூலோ, 10 செப்டம்பர் (பெர்னாமா) --  சபாவில் உள்ள ஒரு பொது மருத்துவமனையில் பகடிவதையால் பாதிக்கப்பட்டதாக சில மருத்துவர்கள் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து, சுகாதார அமைச்சு உடனடியாக விரிவான விசாரணையை மேற்கொள்ளும்.

மருத்துவர்களிடையே நிகழும் பகடிவதை நடவடிக்கைகளில் சுகாதார அமைச்சு சமரசம் செய்து கொள்ளாது என்றும் அதில் தொடர்புடையவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

"நாங்கள் இன்னும் விரிவான மற்றும் கூடுதல் விசாரணையைத் தொடர்வோம். நாங்கள் ஒரு சுதந்திர அமைப்பை உருவாக்குவதா அல்லது... உடனடியாக முடிவெடுப்போம்," என்று அவர் கூறினார்.

பிரிவுத் தலைவர்கள் மற்றும் நிபுணத்துவ மருத்துவர்களால் வாய்மொழியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட சில மருத்துவர்களைப் பற்றி உள்நாட்டு ஊடக இணையதளம் ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாவிட்டால், கூரிய ஆயுதங்களைக் காட்டி மிரட்டுவதுடன், அவதூறான, ஆபாசமான வார்த்தைகளாலும், இன இழிவு வார்த்தைகளாலும்  துன்புறுத்தப்பட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இதனிடையே, சமூகப் பாதுகாப்பு அமைப்பு, பெர்கேசோவின் உடல் குறைபாடு போலி கேட்புத் தொகை விவகாரத்தில் ஈடுபட்டிருக்கும் சில மருத்துவர்களுடன் ஒருபோதும் சமரசம் காணப்படாது என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

மேல் விசாரணைக்காக, சம்பந்தப்பட்ட வழக்கை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் ஒப்படைப்பதாக டாக்டர் சுல்கிப்ளி தெரிவித்தார்.

"அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை உட்படுத்திய எந்த விவகாரத்திலும் நாங்கள் சமரசம் காண மாட்டோம். எனவே, தமது அமைப்பு மற்றும் அமைச்சில் உள்ள பதவியைத் தவறாகப் பயன்படுத்துவதை, ஊழலை, அதிகார மீறலை என்னால் சமரசம் காண முடியாது," என்று அவர் கூறினார்.

பெர்கேசோவின் உடல் குறைபாடு போலி கேட்புத் தொகை விவகார விசாரணைக்கு உதவ இரண்டு எலும்பியல் மருத்துவர்களும் ஒரு முகவரும் அண்மையில் தடுத்து வைக்கப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)