பொது

இளையோர்கள் மத்தியில் ஏற்படும் இறப்புகளில் தற்கொலை மூன்றாவது முக்கிய காரணம்

10/09/2024 07:19 PM

கோலாலம்பூர், 10 செப்டம்பர் (பெர்னாமா) --  உலக தற்கொலை தடுப்பு தினம் இன்று.

ஆண்டு தோறும் உலகளவில் சுமார் 7 லட்சத்து 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்துக் கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகின்றது.

குறிப்பாக, 15 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் மத்தியில் ஏற்படும் இறப்புகளில் தற்கொலை மூன்றாவது முக்கிய காரணமென அதன் புள்ளி விவரம் காட்டுகின்றது.

ஒரு நபர் தற்கொலை செய்துக் கொள்வதற்குப் பல காரணங்கள் இருக்கும் நிலையில், அதில் 90 விழுக்காட்டினர் மனநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை மருத்துவ ஆய்வுகள் காட்டுவதாக, சினேஹம் அமைப்பின் தலைவர் டத்தோ டாக்டர் ஃபுளோரன்ஸ் மனோரஞ்சிதம் சின்னையா கூறினார்.

தற்கொலை பற்றிய தெளிவையும் புரிதலையும் மக்களுக்கு எடுத்துணர்த்தும் விதமாக, 'Change The Narrative, Start The Conversation' எனும் கருப்பொருளில் இவ்வாண்டின் உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

பொதுவாகவே, தினசரி வாழ்க்கையில் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வுக் காண தவறுபவர்களே தற்கொலை செய்து கொள்ள தூண்டப்படுகின்றனர்.

அதில், நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக முனைவர் ஃபுளோரன்ஸ் சுட்டிக்காட்டினார்.

''2019-ஆம் ஆண்டில் 609 தற்கொலை சம்பவங்களும், 2020-ஆம் ஆண்டில் 621 சம்பவங்களும், 2021-ஆம் ஆண்டு 1142 தற்கொலை சம்பவங்கள், 2022-ஆம் ஆண்டு சற்று குறைந்து 981 சம்பவங்களும் பதிவாகியுள்ள நிலையில், சென்ற ஆண்டு 2023-ஆம் ஆண்டில் சுமார் 10 விழுக்காடு அதிகரித்து 1087 தற்கொலை சம்பவங்கள் நடந்ததாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன'', என்று அவர் கூறினார்.

நாட்டில், ஆண்களை உட்படுத்தியே அதிகமான தற்கொலைகள் அதாவது 3600-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவான வேளையில், 780 சம்பவங்கள் பெண்கள் மத்தியில் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இதில், இந்திய சமூகம் மூன்றாவது இடத்தில் இருக்கின்ற போதிலும், பிற இனத்தவர்களோடு ஒப்பிடுகையில் இந்தியர்கள் சிறுப்பான்மை சமூகமாக இருப்பதால் அதன் எண்ணிக்கை உயர்ந்து காணப்படுவதாக முனைவர் ஃபுளோரன்ஸ் தெரிவித்தார்.

''சீன சமூகம் மற்ற இனங்களோடு ஒப்பிடும் போது ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. அடுத்து மலேசியர் அல்லாத குடிமக்கள் இரண்டாவது இடத்திலும், இந்தியர்கள் மூன்றாவது இடத்திலும், மலாய்க்காரர்கள் நான்காவது அதிக தற்கொலை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். பொதுவாக நம் நாட்டின் மக்கள் தொகையை ஒப்பிடுகையில் இந்தியர்கள் மத்தியில் நடக்கும் தற்கொலை சம்பவங்கள் கண்டிப்பாக கவலைக்குரியதாக தான் இருக்கின்றது'', என்றார் அவர்.

இதனிடையே, எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை ஒரு தீர்வாக முடியாது என்றும் முதலில் மனநல ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இது ஒரு சமூக பிரச்சனை என்பதால் ஒரு நபரின் தினசரி நடவடிக்கையில் மாற்றம் கண்டால், அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடி தீர்வை காண வேண்டும் என்று அவர் முனைவர் ஃபுளோரன்ஸ் குறிப்பிட்டார்.

''நீங்க ஏதாவதொரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கலாம். அது குடும்ப பிரச்சனையாக இருக்கலாம், குடும்பத்தில் விரிசல் அல்லது குடும்ப வன்முறை மற்றும் ஓர் இழப்பிலிருந்து மீண்டு வர முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இருக்கலாம் அல்லது ஏதாவது சோகம், வேதனை, விரக்தி, இப்படி ஒரு சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் யார்கிட்டையும் நீங்க மனசு விட்டு பேசுங்க'', என்று அவர் வலியுறுத்தினார்.

எனவே, தற்கொலை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்நோக்கக் கூடியவர்களுக்கு, இலவச ஆலோசனைகளை வழங்க சினேஹம் அமைப்பு தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)