பொது

பாதுகாப்பான முறையில் கோழி குஞ்சுகளுக்கு வர்ணம் தீட்டுவது விலங்கு கொடுமை அல்ல - டி.வி.எஸ்

13/09/2024 08:09 PM

புத்ராஜெயா, 13 செப்டம்பர் (பெர்னாமா) --  விலங்குகளுக்கு ஆபத்து ​​அல்லது துன்பத்தை ஏற்படுத்தாதவாறு கோழி குஞ்சுகளுக்கு வர்ணம் தீட்டுவது விலங்கு கொடுமையாக கருதப்படாது என்று கால்நடை சேவை துறை, DVS தெரிவித்துள்ளது.

2015-ஆம் ஆண்டு விலங்குகள் நலச் சட்டம் செக்‌ஷன் 772 உட்பிரிவு 29-இன் கீழ் அவை விலங்குகள் கொடுமையாக கருதப்படாது என்று, இன்று கால்நடை சேவை துறை வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

2024-ஆம் ஆண்டு மலேசிய விவசாயம், தோட்டக்கலை மற்றும் வேளாண் சுற்றுலாவின் கண்காட்சியில் விலகுகள் தவறாக நடத்தப்படுவதாக கூறி வைரலாகும் டிக் டாக் காணொளியைக் குறித்தும் கால்நடை சேவை துறை குறிப்பிட்டிருந்தது.   

இதனிடையே, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அக்கோழி குஞ்சுகள் நல்ல நிலையில் இருப்பதையும், நோய் அல்லது துன்புறுத்தலின் அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படாதது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

சிலாங்கூர் செர்டாங்கில் இருக்கும் மலேசிய விவசாயக் கண்காட்சி பூங்காவில் செப்டம்பர் 11-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறும் 2024-ஆம் ஆண்டு மலேசிய விவசாயம், தோட்டக்கலை மற்றும் வேளாண் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ள அனைத்து விலங்குகளின் நலனை கண்காணிக்க விலங்கு நல அதிகாரிகளை கால்நடை சேவை துறை நியமித்துள்ளது.    

எனினும், தேவையற்ற எதிர்வினைகளைத் தூண்டும் எந்தவொரு அறிக்கையையும் வெளியிடுவதற்கு முன் கால்நடை அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)