பிலிப்பைன்ஸ், 04 மார்ச் (பெர்னாமா) -- ரிசால் கூட்டரசில் உள்ள பிலிலாவில், ஐவரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் செவ்வாய்க்கிழமை காலை விபத்துக்குள்ளானதில் மலேசியர் ஒருவர் பலியான வேளையில் மற்றொருவர் காயமுற்றார்.
காலை மணி 7.27 அளவில், பெல் 505 வகையிலான அந்த ஹெலிகாப்டர், காலியான நிலப்பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு, இந்த விபத்தில் பிலிப்பைன்ஸ் பயணி ஒருவரும் உயிரிழந்தார்.
இறந்தவரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறிய, மலேசியாவுக்கான பிலிப்பைன்ஸ் தூதர் டத்தோ அப்துல் மாலிக் மெல்வின் கெஸ்டலினோ இறந்தவரின் குடும்ப உறவுகளிடமும் இது குறித்து தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
இறந்தவரின் நெருங்கிய உறவினர்களுக்கு தூதரகம் தொடர் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், இதற்கான நடைமுறைகளை குறிப்பாக தூதரக ஏற்பாடுகளை எளிதாக்க, உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து தமது தரப்பு பணியாற்றி வருவதாகவும் அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த மலேசியர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காயமடைந்தவர்களுக்கு உரிய ஆதரவையும் உதவியையும் வழங்குவதற்காக தூதரக அதிகாரிகளும் அவர்களைக் கண்காணித்து வருகின்றனர்.
முன்னதாக, மணிலாவிலிருந்து கியுசன் கூட்டரசிற்குச் சென்று கொண்டிருந்த பெல் 505 வகை ஹெலிகாப்டர், அவசரமாக தரையிறங்கிய சம்பவம் குறித்து பிலிப்பைன்ஸ் அமலாக்க விமானப் போக்குவரத்து ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]