பொது

மக்கோத்தா இடைத்தேர்தல் ; வெள்ளத்தை எதிர்கொள்ள தயார்நிலைப் பணிகள்

14/09/2024 06:48 PM

குளுவாங், 14 செப்டம்பர் (பெர்னாமா) --  மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலின்போது, தேர்தல் நடைபெறும் இடத்தில் வழக்கமான பணிகளுக்கு மத்தியில் அப்பகுதியில் வெள்ளத்தை எதிர்கொள்வதற்கான தயார்நிலை நடவடிக்கைகளையும் போலீஸ் மேற்கொண்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரம் உட்பட இம்மாதம் செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறவிருக்கும் வாக்களிப்பின் போது வெள்ளம் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள 38 அதிகாரிகளும் உறுப்பினர்களும் தயார்நிலையில் உள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் கூறினார்.

''நாங்கள் தயாராக உள்ளோம். வெள்ளம் ஏற்பட்டால் அதற்கான உடனடி நடவடிக்கைகள் குறித்து நாங்கள் திட்டங்கள் வகுத்துள்ளோம். படகுகள் உள்ளன, ஐந்து டன் லாரியும் குளுவாங் போலீஸ் தலைமையகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது'', என்று அவர் கூறினார்.

வெள்ளச் சூழ்நிலையை எதிர்கொள்ள, அரச மலேசிய போலீஸ் படையின் உபகரணங்கள் உட்பட அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களும் குளுவாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தயார்நிலையில் உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலின்போது, தேசிய முன்னணி மற்றும் பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த சுமார் 15,000 ஆதரவாளர்களை உள்ளடக்கிய பணிகள் அனைத்தும் சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய, அரச மலேசிய போலீஸ் படையின் 1,027 அதிகாரிகளும் உறுப்பினர்களும் பணிக்கு அமர்த்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)