பொது

எஸ்.எஸ்.பி.ஏ-வை தேர்ந்தெடுக்காதவர்கள் ஊதிய சீரமைப்பைப் பெறமாட்டார்கள்

14/09/2024 07:33 PM

கோலாலம்பூர், 14 செப்டம்பர் (பெர்னாமா) --  பொது சேவை ஊதிய முறையைத் தேர்வு செய்யாத பொது சேவை துறை ஊழியர்கள், இவ்வாண்டு டிசம்பர் முதலாம் தேதி மற்றும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதிகளில் இரு கட்டங்களாக அமல்படுத்தப்படும் ஊதிய சீரமைப்பைப் பெறும் தகுதியை இழக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, அதே தேதிகளில் அத்துறையில் பணியில் இல்லாதவர்களும் அதற்கான தகுதியை இழப்பதாக, பொது சேவை துறையின் 2024-ஆம் ஆண்டு முதலாவது சேவை சுற்றறிக்கை காட்டுகிறது.

இவ்வாண்டு டிசம்பர் முதலாம் தேதிக்கு முன்னதாகவே பணிக்கு அமர்த்தப்படும் மற்றும் அதே தேதியில் பணியில் இருக்கும் ஊழியர்கள் மட்டுமே இந்த ஊதிய சீரமைப்பிற்கு தகுதியானவர்கள் என்று பொது சேவை துறை அகப்பக்கத்தில் பதிவேற்றப்பட்ட அச்சுற்றறிக்கை விவரிக்கின்றது.

அதோடு, அதே டிசம்பர் முதலாம் தேதி பொது சேவை துறையின் பணியாளர் ஒருவர் உயிரிழக்க நேரிட்டாலும் அவர்கள் அச்சீரமைப்பிற்கு தகுதி பெறுகிறார்கள்.

அதேபோல, 2026-ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதிக்கு முன்னதாகவே பணிக்கு அமர்த்தப்படும் மற்றும் அச்சமயம் பணியில் இருக்கும் ஊழியர்கள் உட்பட அந்நாளில் உயிரிழக்கும் பணியாளர்களும் இரண்டாம் கட்ட ஊதிய மறுசீரமைப்பிற்கு தகுதி பெறுவர்.

பொது சேவை துறையின் சேவை குழு, அதாவது நிர்வாகம் மற்றும் நிபுணத்துவ குழு அதிகாரிகளுக்கு 15 விழுக்காட்டு ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளது.

முதற்கட்டத்தில் எட்டு விழுக்காடு அல்லது குறைந்தது 240 ரிங்கிட் ஊதிய உயர்வையும், இரண்டாம் கட்டத்தில் ஏழு விடுக்காட்டு உயர்வையும் அரசாங்கம் வழங்கும்.

இதனிடையே, பொது சேவை துறையில் இணைவதற்கான குறைந்தபட்ச தகுதி வரம்பு தற்போது எஸ்.பி.எம்  கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

11 சேவை திட்டங்களுக்கான, மூன்றாம் படிவ மதிப்பீடு, பி.டி.3 அல்லது பி.எம்.ஆர் நுழைவு தகுதி தற்போது எஸ்.பி.எம் கல்வி தகுதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)