உலகம்

பூமிக்குத் திரும்புவதில் தாமதம்; சோதனைக் காலம் என்றாலும், ஐ.எஸ்.எஸ்-இல் அதிக நாட்கள் தங்க முடிந்ததில் மகிழ்ச்சி

14/09/2024 08:06 PM

விண்வெளி ஆய்வு மையம் , 14 செப்டம்பர் (பெர்னாமா) -- கடந்த ஜூன் 5-ஆம் தேதி பூயிங் நிறுவனத்தின் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்று, அங்கு சிக்கிக் கொண்ட நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோரும் சுனிதா வில்லியம்சும், இந்த தாமதம் தங்களுக்கான சோதனைக் காலம் என்று தெரிவித்துள்ளனர்.

எனினும், அனைத்துலக விண்வெளி நிலையம், I-S-S-இல் அதிக நாள்கள் தங்க முடிந்தது குறித்தும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்த விண்வெளி பயணத்தின்போது, புட்ச் வில்மோரும், சுனிதா வில்லியம்சும் 8 நாட்களில் பூமிக்கு திரும்புவதாக இருந்தது.

ஸ்டார் லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் பூமிக்குத் திரும்ப முடியாமல் போனது.

அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதமே அவர்கள் பூமிக்குத் திரும்புவதற்கான சாத்தியம் உள்ளது.

இந்நிலையில், விண்வெளியில் இருந்து செய்தியாளர்களுடன் உரையாடிய வில்மோரும், சுனிதா வில்லியம்சும் தங்களுக்கு பூமியிலிருந்து மக்கள் செய்திகள் அனுப்புவது குறித்தும், விண்வெளியில் இருந்து அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது தொடர்பிலும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

''வாக்குச் சீட்டுக்கான எனது கோரிக்கையை [2024 தேர்தலில் வாக்களிக்க] இன்று அனுப்பியுள்ளேன். அவர்கள் அதை சில வாரங்களில் எங்களுக்கு அனுப்ப வேண்டும். ஆமாம். அது மிகவும் முக்கியமான கடமையாகும். குடிமக்களாகிய நாம் அனைவரும் அந்தத் தேர்தல்களில் உட்படுத்தப்பட வேண்டும். நாங்கள் அதை (வாக்களிக்கும் கடமையை) செய்வதை நாசா எங்களுக்கு மிகவும் எளிதாக்கியுள்ளது,'' என்றார் புட்ச் வில்மோர்.

''அது குடிமக்களாகிய நமது முக்கியமான கடமை. விண்வெளியில் இருந்து வாக்களிக்க முடியும் என்று எதிர்பார்க்கிறோம். இது மிகவும் அருமையாக இருக்கிறது. நாங்கள் எதற்கு ஆர்வமாக இருக்கிறோம் என்று நீங்கள் கேட்டீர்கள், இல்லையா? நிச்சயமாக, நாங்கள் எப்பொழுதும் எங்கள் குடும்பத்தை காண மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். நான் எனது இரண்டு நாய்களையும் காண மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். எனது நண்பர்களைக் காண ஆர்வமாக இருக்கிறேன். ஆனால், உங்களுக்குத் தெரியுமா? புட்ச் கூறியதுபோல, பூமியில் இருந்து அதிகமானோர் எங்களுக்கு செய்திகள் அனுப்புகின்றனர். அது, எல்லோருடனும் வீட்டில் இருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்துகிறது,'' சுனிதா வில்லியம்ஸ் .

தங்களின் பயிற்சி நீண்ட கால தாமதத்தை விரைவாக சரிசெய்து, தங்கள் பணியில் கவனம் செலுத்த கற்றுக் கொடுத்ததாக இரண்டு விண்வெளி வீரர்களும் கூறினர்.

எனினும், தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்கு திட்டமிட்டிருந்தபடி மேற்கொள்ள முடியாமல் போனதை எண்ணி, அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)