விளையாட்டு

மீண்டும் ஒரு வரலாற்று சாதனையைப் பதிவு செய்தனர் பெர்லி டான் - எம்.தீனா ஜோடி

15/09/2024 06:51 PM

கௌலோன், 15 செப்டம்பர் (பெர்னாமா) -- 2024ஆம் ஆண்டு ஹாங்காங் பொது பூப்பந்து போட்டியில், இரண்டு ஆண்டுகள் எந்த அனைத்துலகப் போட்டியிலும் வெற்றி பெறாத தாகத்தை தீர்த்துக் கொண்டுள்ளனர் நாட்டின் மகளிர் இரட்டையர்களான பெர்லி டான் - எம்.தீனா ஜோடி.

நாட்டின் முதன்மை இரட்டையர்களான அவர்கள் இருவரும், இப்போட்டியில் உலகின் மூன்றாம் தரவரிசை விளையாட்டாளர்களான சீனாவைச் சேர்ந்த LIU SHENG SHU-TAN NING ஜோடியை 21-14, 21-14 என்ற புள்ளிகளில் வீழ்த்தினர்.

ஹாங்காங் கொலெசியாமில் நடைபெற்ற இந்த இறுதி ஆட்டத்தில்,பெர்லி டான் - எம்.தீனா ஜோடி வெளிப்படுத்திய அபார ஆட்டத்திறனால் அதிர்ந்த  LIU SHENG SHU-TAN NING ஜோடி பல எளிய தவறுகளை செய்து ஆட்டத்தில் பின்தங்கியது.

இதனால், முதல் செட் ஆட்டத்தை 21-14 என்ற புள்ளிகளில் தங்கள்வசமாக்கிக் கொண்டனர் பெர்லி டான் - எம்.தீனா ஜோடி.

இரண்டாம் செட் ஆட்டத்திலும் இதே ஆட்டத்தைத் தொடர்ந்த பெர்லி டான் - எம்.தீனா ஜோடி எவ்வித சிரமமும் இல்லாமல் 21-14 என்ற புள்ளிகளில், 37 நிமிடங்களில் தங்களின் வெற்றியை உறுதிசெய்து ஆட்டத்தை நிறைவு செய்து வைத்தனர்.

இதன்வழி, இந்த இணை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் உலக அரங்கில் தங்களின் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.

உலகின் எட்டாம் தரவரிசையில் உள்ள இந்த ஜோடி இறுதியாக, 2022 பிரான்ஸ் பொது பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)