பொது

நாட்டின் கல்விக் கொள்கையை மாற்றி அமைக்கும் துணைப் பிரதமரின் பரிந்துரை அமைச்சரவை அளவில் விவாதிக்கப்படும்

16/09/2024 05:20 PM

கோத்த கினபாலு, 16 செப்டம்பர் (பெர்னாமா) --  ஆரம்பப் பள்ளிகளுக்கான யூ.பி.எஸ்.ஆர் மற்றும் படிவம் மூன்று பயிலும் மாணவர்களுக்கான பி.டி.3 தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், நாட்டின் கல்விக் கொள்கையை மாற்றி அமைப்பதற்கான துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடியின் பரிந்துரை அமைச்சரவை அளவில் விவாதிக்கப்படும்.

தற்போது அமல்படுத்தப்பட்டு வரும் நாட்டின் கல்வி முறையில் மேற்கொள்ளப்படும் சீர்த்திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகளில் கவனம் செலுத்தப்படும் அம்சங்களில் சம்பந்தப்பட்ட பரிந்துரையும் அடங்கும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.

"தேசிய அமைப்பில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற அவரது விருப்பத்தை வரவேற்கிறோம். முன்னதாக, கல்வி அமைச்சில் அதற்கான உறுதிமொழிவுகள் எடுக்கப்பட்டதாக நான் நினைக்கிறேன். புதிய கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் தயார்நிலை பணிகளை நாங்கள் கவனித்து வருகிறோம். ஏனெனில், தற்போதுள்ள கல்வி மேம்பாட்டுத் திட்டம் 2025-ஆம் ஆண்டில் நிறைவுப் பெறும். அதேபோல, 2027-ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் புதிய பாடத்திட்ட முறை 2026-ஆம் ஆண்டிலேயே பாலர்பள்ளி மாணவர்களுக்குத் தொடங்கி விடுவோம்", என்று அவர் கூறினார்.

இன்று சபா, கோத்தா கினபாலுவில் உள்ள ஹென்ரி கேர்ணி மற்றும் ஒருமைப்பாட்டு பள்ளியைப் பார்வையிட்ட பின்னர், ஃபட்லினா சிடேக் செய்தியாளர்களிடம் பேசினார்.

அதேவேளையில், கடந்தாண்டு எஸ்.பி.எம் மாணவர்களின் இடைநிற்றல் பிரச்சனைக்குப் படிக்க, எழுத மற்றும் கணக்கிட தெரியாததே காரணம் என்று டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் கூறியிருப்பது குறித்து கருத்துரைத்த அவர், தொடக்கப்பள்ளி முதலே மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றும் செயல்படுத்தப்பட விருக்கும் சில திட்டங்களின் வழி அப்பிரச்சனை கையாளப்பட்டு விட்டதாக குறிப்பிட்டார்.

கடந்தாண்டு எஸ்.பி.எம் தேர்வில் சுமார் 10,177 மாணவர்கள் படிக்க, எழுத மற்றும் கணக்கிட தெரியாததே காரணத்தினால் இடைநிற்றல் பிரச்சனையை எதிர்நோக்கியது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, ஆறாம் ஆண்டு மற்றும் படிவம் 3 மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்திருக்கும் நாட்டின் கல்வி கொள்கை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் தெரிவித்திருந்ததாக முன்னதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)