பொது

ஈரடுக்கு பேருந்து சாலை தடுப்பில் மோதியதில் 34 பேர் காயம்

16/09/2024 05:58 PM

ஈப்போ, 16 செப்டம்பர் (பெர்னாமா) --  ஈப்போவிற்கு அருகே, தெற்கு நோக்கி செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 273.5ஆவது கிலோமீட்டரில், இன்று அதிகாலை இரண்டு அடுக்கு பேருந்து ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதியதில் பேருந்து ஓட்டுனர் உட்பட 34 பணிகள் காயமடைந்தனர்.

அச்சம்பவம் குறித்து தங்கள் தரப்புக்கு அதிகாலை மணி சுமார் 1.10க்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஈப்போ, சிம்பாங் பூலாய், மேரு ராயா மற்றும் தம்பூன் ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உதவியோடு அவ்விடத்திற்கு விரைந்ததாக, பேராக் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குனர் சபாரோட்ஸி நோர் அஹ்மாட் கூறினார்.

பேருந்தின் கீழ் தளத்தில் இருக்கைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டு மூவர் பலத்த காயங்களுக்கு ஆளாகிய நிலையில் மேல் தளத்தில் இருந்த மற்ற 30 பயணிகள் சிறு காயங்களுடன் தாமாகவே பேருந்தை விட்டு வெளியேறியதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் சபாரோட்ஸி குறிப்பிட்டார்.

எனினும், இருக்கைகளைச் சரி செய்தப் பின்னரே, அதில் சிக்கியவர்கள் காப்பாற்றப்பட்டு வெளியேற்றப்பட்டதாக, சபாரோட்ஸி தெரிவித்தார்.

சிறு காயங்களுடன் உயிர் தப்பிய 31 பயணிகளுக்குச் சுகாதார அமைச்சின் ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளித்தனர்.

மேலு, பலத்த காயங்களுக்கு ஆளான மூவர், மேல் சிகிச்சைக்காக ஈப்போ, ராஜா பெர்மாய்சூரி பைனூன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அதிகாலை மணி 2.45 அளவில் மீட்பு பணி முழுமையாக நிறைவடைந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)