பொது

காற்றுத் தூய்மைக்கேட்டை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரும் உதவியாளரும் ஆறு நாட்களுக்கு தடுத்து வைப்பு

16/09/2024 06:34 PM

ஜோகூர் பாரு, 16 செப்டம்பர் (பெர்னாமா) --  இம்மாத தொடக்கத்தில் ஜோகூர் பாரு சுற்றுவட்டாரத்தில் காற்றுத் தூய்மைக்கேட்டை ஏற்படுத்தும் வகையில் இரசாயனக் கழிவுகளை வீசிய வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மற்றும் அவரின் உதவியாளரின் தடுப்புக் காவல் இன்று தொடங்கி ஆறு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 430-இன் கீழ் விசாரணையைத் தொடர போலீசாருக்கு அனுமதி அளிக்கும் வகையில் ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்ற மூத்த உதவிப் பதிவாளர் நூர் கலிடா ஃபர்ஹானா அபு பக்கார் இத்தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

23 மற்றும் 28 வயதுடைய அவ்விருவரும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 117-இன் கீழ் முன்னதாக கடந்த 10ஆம் தேதி தொடங்கி ஏழு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதனிடையே, சிறைச்சாலை உடையணிந்த அவ்விருவம், ஜோகூர் பாரு நீதிமன்றத்திற்கு போலீசாரால் அழைத்து வரப்பட்டனர்.

இம்மாவட்டத்தைச் சுற்றிலும் காற்று தூய்மைக்கேட்டை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கடந்த 9ஆம் தேதி ஜோகூர் பாருவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்கள் குறித்து மேற்கொண்ட சோதனையில், முன்னதாக அவர்கள் மீது எவ்வித குற்றப் பதிவும் இல்லை என்பதோடு, சிறுநீர் பரிசோதனையிலும் அவர்கள் போதைப் பொருளை உட்கொள்ளவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)