பொது

தஞ்சோங் ரம்புத்தான் வட பகுதி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்

16/09/2024 07:27 PM

தஞ்சோங் ரம்புத்தான், 16 செப்டம்பர் (பெர்னாமா) --  பேராக் மாநிலத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயங்களில் ஒன்றான, தஞ்சோங் ரம்புத்தான் வட பகுதி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

சுமார் 70 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இவ்வாலயத்தில் நடைபெறும் மூன்றாவது கும்பாபிஷேகம் இதுவாகும்.

இங்கு ரப்பர் தோட்டம் பயிரிடப்பட்ட காலக்கட்டத்தில், சுற்றுவட்டார மக்களின் துணையோடு இவ்வாலயம் எழுப்பப்பட்டது.

பின்னர், கடந்த 1988ஆம் ஆண்டு மேம்பாட்டு திட்டங்களினால் ஆலயத்திற்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டு, தற்போதுள்ள இடத்தில் ஆலயம் கட்டப்பட்டது.

தொடக்கத்தில் சிறிய அளவில் கட்டப்பட்ட இவ்வாலயம் பின்னர், கட்டம் கட்டமாக சீரமைக்கப்பட்டு தற்போது பெரிய ஆலயமாக உருமாறி இருப்பதாக ஆலயத் தலைவர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தார்.

இவ்விழாவில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட உலுகிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அராப்பாட், ஆலயத்தை அச்சுறுத்தி வந்த மண் அரிப்பு பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணப்பட்டுள்ளதாகக் கூறினார்.

 ''இவ்வாலயம் ஆற்றோரத்தின் அருகில் அமைந்துள்ளது. இதனால் ஆற்றின் மண் அரிப்பினால் ஆலயத்திற்கு பாதிப்பு வரும் என்று ஆலய நிர்வாகம் அண்மையில் என்னிடம் புகார் கூறினர். அதைத் தொடர்ந்து மண் அரிப்பை தவிர்க்க சுமார் ஒரு லட்சம் ரிங்கிட் செலவில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன,'' என்றார் அவர்.

இதனிடையே, அதிகாலையில் தொடங்கிய சிறப்புப் பூஜைகளைத் தொடர்ந்து, காலை மணி 10.15 மணியளவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.

மேலும் இம்முறை ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 35 அடி உயரத்திலான வேல், பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)