பொது

மரம் சாய்ந்ததில் சாலையில் பயணித்த இருவருக்கு பலத்த காயம்

18/09/2024 07:50 PM

ஈப்போ, 18 செப்டம்பர் (பெர்னாமா) -- இன்று, கமுந்திங், தாமான் கிலென் வியூ அருகில் உள்ள ஜாலான் கமுந்திங்கில் மரம் சாய்ந்ததில் அச்சமயத்தில் அங்கு பயணித்த ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை உட்படுத்தி எழுவர் பாதிக்கப்பட்ட நிலையில் தில் இருவர் பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். 

இச்சம்பவம் குறித்து இன்று நண்பகல் மணி 12.53-க்கு தமது தரப்பிற்கு அவசர் அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, கமுந்திங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அங்கு விரைந்ததாக பேராக் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் சபாரொட்சி நோர் அஹ்மாட் தெரிவித்தார். 

பெரோடுவா அல்சா ரக கார் மற்றும் யமாஹா Y15 ரக மோட்டார் சைக்கிள் ஆகிய இரண்டும் அம்மரம் சாய்ந்தபோது அங்கு பயணத்தில் இருந்ததாக சபாரொட்சி கூறினார். 

பெரோடுவா அல்சாவில் பயணித்த ஐந்து பெண்களில் இருவருக்கு சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்ட நிலையில் மூவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. 

அதில் பயணித்த அனைவரும் 16-இல் இருந்து 35 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். 

எனினும், அந்த மோட்டார் சைக்கிளில் தமது மகள் என்று நம்பப்படும் சுமார் 40 வயதுடைய ஆடவருடன் பயணித்த பதின்ம வயது பெண் ஒருவரும் அவ்வாடவரும் பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் சபாரொட்சி குறிப்பிட்டார்.  

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]