பொது

பெர்னாமாவிற்கு 'சிறந்த ஊடக விருது'

01/05/2025 05:58 PM

புக்கிட் ஜாலில், 01 மே (பெர்னாமா) - இன்று நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு தேசிய தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தின்போது நிறுவனப் பிரிவில் சிறந்த ஊடக விருது, மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமாவிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவ்விருதை பெர்னாமா தலைமை நிர்வாக அதிகாரி டத்தின் படுக்கா, நூருல் அஃபிடா கமாலுடினிடம் வழங்கினார்.

முதல் முறையாக வழங்கப்பட்டிருக்கும் உயர் நிர்வாகப் பிரிவில் பொது சேவையில் தேசிய தொழிலாளர் விருதும் மனிதவள அமைச்சு KESUMA அறிமுகப்படுத்திய இரண்டு புதிய பிரிவுகளில் ஒன்றாகும்.

பல்வேறு செய்தி தளங்கள் மூலம் மக்களுக்கு துல்லியமாக உண்மைத் தகவல்களை உடனடியாக வழங்குவதில் சிறந்த பங்கை ஆற்றும் ஊடக நிறுவனங்களை அங்கீகரிக்கும் நோக்கத்தில் நிறுவனப் பிரிவில் சிறந்த ஊடக விருது அறிமுகப்படுத்தப்பட்டது.

கோலாலம்பூரில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் பெர்னாமா, வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் பணியகத்தைக் கொண்டு விரிவான உள்ளூர், வட்டார மற்றும் உலகளாவிய செய்திகளை வழங்கி வருகிறது.

இதனிடையே, இவ்விருதுக்கு பெர்னாமா தேர்வு செய்யப்பட்டிருப்பது 57 ஆண்டுகளாக நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடக நிறுவனமாக ஆற்றிவரும் பங்கிற்கு கிடைத்த முதல் அங்கீகாரம் என்று டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கூறினார்.

"மே முதலாம் தேதி தொழிலாளர் தினத்துடன் இணைந்து கெசுமா ஏற்பாடு செய்த தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தில், முதல் முறையாக ஊடகங்கள் சிறந்த ஊடகப் பிரிவாக முடிசூட்டப்பட்டது.மேலும், முதல் முறையாக, பெர்னாமா சிறந்த ஊடக நிறுவனப் பிரிவாக அங்கீகரிக்கப்பட்டது,'' என்றார் அவர்.

பெர்னாமாவில் அனைத்து தரப்பினரும் குறிப்பாக செய்தித் துறைக்கு கிடைத்த  உண்மையான வெற்றி என்றும் அவர் கருத்துரைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)