சிறப்புச் செய்தி

வாடிக்கையாளர்களின் பாராட்டுதான் ஒரு சமையல் கலைஞருக்கான சிறந்த அங்கீகாரம்

20/09/2024 08:53 PM

கோலாலம்பூர், 20 செப்டம்பர் (பெர்னாமா) -- நெருப்புக்கும் கரண்டிக்கும் நடுவே நின்று சுவை நிறைந்த உணவை சமைத்து நளபாகம் படைப்பதில், கைதேர்ந்தவர்கள் சமையல் கலை நிபுணர்கள்.  

CHEF என்று அழைக்கப்படும் இவர்கள், தங்கள் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த வகை வகையாய், ரகம் ரகமாய் சமையலில் புதுமை செய்து, தனி பாணியில் அதனை பரிமாறி, சமூக ஊடகங்களிலும் பதிவிட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கின்றார்கள். 

இன்றுவரை பெரும்பாலான வீடுகளில் சமையல் பெண்களின் பொறுப்பு என்றாலும், உணவகங்களில் அதிகமாக சமைப்பவர்கள் ஆண்களாவே இருப்பதால், இத்துறையில் பயணித்து சமையல் வல்லுநராகி இருக்கும் சுரேந்திரன் பாலசந்திரன் உடன் பெர்னாமா செய்திகள் மேற்கொண்ட நேர்க்காணல் தொடர்ந்து இடம் பெறுகிறது. 

சமையல் தெரியவில்லை என்றாலும் அதற்கு முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணமே முதலில், ஒரு சமையல்காரரை உருவாக்குவதாக கூறுகின்றார் சிலாங்கூர், ஶ்ரீ கெம்பாங்கானைச் சேர்ந்த சுரேந்திரன் பாலசந்திரன்.

சிறுவயதில், வீட்டில் தாயாரின் சமையலை ரசித்து ருசித்த இவர், தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளைப் பார்த்து, மெல்ல மெல்ல அதில் ஈர்க்கப்பட்டு அக்கலையில், தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.  

எஸ்.பி.எம் முடித்தவுடன், விடுதி ஒன்றில் சமையல்காரர் பணியில் இணைந்த சுரேந்திரன், பகுதி நேரமாக அத்துறையில் படித்து டிப்ளோமா பட்டம் பெற்றார்.

அதன் பிறகு, விடுதி ஒன்றில் சமையல் பிரிவின் COMMIS ONE என்ற நிலையில் இணைந்து கட்டம் கட்டமாக தமது திறமையை வளர்த்துக் கொண்டு சமையல் கலை நிபுணராகி, தலைமை சமையல்காரராகவும் வெற்றிக் கண்டுள்ளார்.

இத்துறையில் பல வெற்றிகளைக் கண்டிருந்தாலும் வாடிக்கையாளர்களின் பாராட்டும் நல்ல கருத்தும்தான் ஒரு சமையல் கலைஞருக்கான சிறந்த அங்கீகாரம் என்றும் சுரேந்திரன் நம்புகின்றார். 

''ஒரு சமையல்கார் வெகுநேரம் அணலில் வேலை செய்ய நேரிடும். அப்போது சமைத்த உணவிற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைக்கும் பாராட்டு எங்களுக்கு மிகப் பெரிய அங்கீகாரம்,'' என்றார் அவர்.

சமையலுக்கு தேவையான பொருட்களை தயார்படுத்துதல், பரிமாறுதல், சமைத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் சமையல்காரர்கள் இருப்பார்கள்.

ஆண் பெண் என்று இரு பாலரும் பணிபுரியும் இத்துறையில் BAKING, DESSERT என்ற பிரிவுகளில் பெரும்பாலும் பெண்கள் பணிபுரிவதாக சுரேந்திரன் குறிப்பிட்டார். 

ஒவ்வொருவரும் தங்களுக்கு வகுக்கப்பட்ட வேலைகளை முறையாக செய்தால் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு தேவையான உணவு சரியான நேரத்தில் தயாராகும் என்று கூறிய அவர், அதனை உறுதி செய்வது, தலைமை பொறுப்பில் இருக்கும் தமது கடமை என்றும் தெரிவித்தார். 

இதனிடையே, தற்போது சமையல் துறையில் நிறைய இளையோர் ஈடுபடுவதாகவும்,  அதற்கு சமூக வலைத்தளங்கள் அவர்களுக்கு உதவியாக இருப்பதாகவும் சுரேந்திரன் கூறினார். 

''இப்போது அதிகமானோர் சமையல்கள் செய்து சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றனர். இது மக்களை எளிதாக சென்றடைகின்றது. நிறைய பேர் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். இது ஒரு நல்ல வாய்ப்பு,'' என்றார் அவர்.

இளைஞர்கள்  சமூக வலைத்தளங்களில் சமையல் சார்ந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதோடு மட்டுமின்றி, அத்துறையில் கல்வி கற்று முழுமையாக ஈடுபட்டால் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள முடியும் என்று 19 ஆண்டுகள் சமையல் துறையில் பயணிக்கும் சுரேந்திரன் வலியுறுத்தினார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)