கோலாலம்பூர், 27 பிப்ரவரி (பெர்னாமா) -- அரசாங்கத்தை கவிழ்க்கவும், நாட்டின் நிலைத்தன்மையைச் சீர்குலைக்கவும், அனைத்துலக ஊடக நிறுவனத்துடன் இணைந்து செல்வாக்கு மிக்க உள்நாட்டவர் ஒருவர் முயற்சிகள் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
இவ்விவகாரம் குறித்து நேற்று புகார் பெறப்பட்ட நிலையில், புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டப் பிரிவு, D5-இன் வகைப்படுத்தப்பட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
இவ்வழக்கும் குற்றவியல் சட்டம், செக்ஷன் 124 B-யின் கீழ் விசாரிக்கப்படுவதாகத் தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுமக்கள் எந்த ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)