ஜார்ஜ்டவுன், 03 நவம்பர் (பெர்னாமா) -- கடந்த வெள்ளிக்கிழமை பினாங்கு மாநிலத்தில் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவதிற்குத் தொடர்புடைய பேருந்தின் செயல்பாட்டைப் போக்குவரத்து அமைச்சு உடனடியாக தற்காலிகமாக நிறுத்தியதோடு சிறப்புப் பணிக்குழுவையும் தொடங்கியுள்ளது.
சாலைப் போக்குவரத்து துறை ஜேபிஜே, தரைப் பொது போக்குவரத்து நிறுவனம் எபிஎடி, மலேசிய சாலை பாதுகாப்பு ஆய்வு கழகம் மிரோஸ் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் அச்சிறப்புப் பணிக்குழுவில் இடம்பெற்றிருப்பர் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
ஜேபிஜேவின் மேல் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட பேருந்தின் செயல்பாட்டை உடனடியாக தற்காலிகமாக நிறுத்த தாம் எபிஎடிக்கு உத்தரவிட்டிருப்பதாக இன்று தமது முகநூல் பதிவில் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
மேலும், இத்தகைய அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்வதோடு பயணிகளின் பாதுகாப்புக்கு எப்போதும் உத்தரவாதம் அளிக்கும் பொருட்டு சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்கான விசாரணையை மேற்கொள்ள சிறப்பு பணிக்குழு தொடங்கப்பட்டுள்ளதாக அவர் அப்பதிவில் விவரித்தார்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவர் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொண்டார்.
நேற்று, பினாங்கு சென்ட்ரலில் விரைவுப் பேருந்தில் உள்ள விசைப் பலகையில் இளைஞர் ஒருவர் தமது கைப்பேசியை மின்னூட்டம் செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.
மாலை மணி சுமார் 6.10-க்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில் 18 வயதுடைய முகமது நூர் அசிமாவி ஜஸ்மதி என்பவர் உயிரிழந்ததாக வட செபெராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அனுவார் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)