பொது

ஏஎல்கே பயிற்சி அதிகாரியின் உயர்க்கல்வி நிறுத்தப்படலாம்

12/11/2024 05:03 PM

கோலாலம்பூர், 12 நவம்பர் (பெர்னாமா) -- சலவைப் பெட்டியைப் பயன்படுத்தி, புதிய மாணவருக்குக் காயம் விளைவித்த மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகம், யுபிஎன்எம்-இன் இராணுவ பயிற்சி கழகம், ஏஎல்கே பயிற்சி அதிகாரியின் உயர்க் கல்வி நிறுத்தப்படலாம்.

அதோடு, உயர்க் கல்வி மற்றும் இராணுவ பயிற்சிக்காக சம்பந்தப்பட்ட அந்த அதிகாரிக்கு வழங்கப்பட்ட உபகாரச் சம்பளத்தையும் மீண்டும் செலுத்தும்படியும் கேட்டுக் கொள்ளப்படும் என்று, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் கூறினார்.

''எந்த ஒரு வன்முறை செயலுக்கும், கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சமரசம் செய்ய மாட்டோம். தற்காப்பு அதிகாரியாகுவதை நாங்கள் நிறுத்துவோம். சம்பந்தப்பட்ட அதிகாரியின் பயிற்சி காலம் முழுவதும் வழங்கிய அனைத்து உபகாரச் சம்பளத்தையும் திரும்ப செலுத்தும்படி கோருவோம்,'' என்றார் அவர்.

இராணுவ பயிற்சியின் மூன்றாம் ஆண்டு பயிற்சி அதிகாரிக்கு எதிரான நடவடிக்கையைத் தீர்மானம் செய்யும் கூட்டத்தை, இவ்வழக்கு தொடர்பான விசாரணை வாரியம் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தியது.

இதனிடையே, இம்மாதம் 8-ஆம் தேதி, சலவைப் பெட்டியைப் பயன்படுத்தி, புதிய மாணவருக்கு காயம் விளைவித்த குற்றத்திற்காக, யுபிஎன்எம்-இன் ஏஎல்கே பயிற்சி அதிகாரி அமிருல் இஸ்கண்டார் நோர்ஹனிசான், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

கடந்த மாதம் 22-ஆம் தேதி இரவு மணி 11.45-க்கு, 20 வயதான முஹமட் சல்மான் முஹமட் சைஃபுல் சுராஷுக்கு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாக அமிருல் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)