பொது

பள்ளி பாடத்திட்டத்தின் வழி சைகை மொழியை கற்கும் வாய்ப்பு

09/03/2026 05:01 PM

ஜாலான் பார்லிமன், 09 மார்ச் (பெர்னாமா) --  கே.பி 2027 எனப்படும் 2027-ஆம் ஆண்டு பள்ளி பாடத்திட்ட அமலாக்கம் அறிமுகப்படுத்துவதன் வழி பொதுப் பிரிவு மாணவர்கள், மலேசிய சைகை மொழி, பி.ஐ.எம்-மைக் கற்க மேலும் அதிகமான வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் வழி பள்ளியில் உள்ளடக்க முறைகள் வலுப்படுத்தப்படுவதோடு, மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய விழிப்புணர்வும் அதிகரிக்கும்.

ஆரம்ப பள்ளிகளில் கல்வி அமைச்சு ஏற்பாடு செய்த தொடர்பு சைகை மொழி மற்றும் பார்வை குறைப்பாடு கொண்ட நபர்களுக்கான அடிப்படை கல்வி போன்ற பாடங்களை மேம்படுத்தும் முயற்சியை இத்திட்டம் பூர்த்தி செய்யும் என்று கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ கூறினார்.

சிறப்புக் கல்வி ஒருங்கிணைப்புத் திட்டம் பி.பி.கே.ஐ மூலம் இந்தப் பாடத்தை செயல்படுத்துவதால் மாற்றுத்திறனாளி மாணவர்களும் பொதுப் பிரிவு மாணவர்களும் மேலும் உள்ளடக்கமான முறையில் ஒன்றாக பயில முடியும் என்று வோங் கா வோ தெரிவித்தார்.

''மாணவர்களின் பங்கேற்பு, மாற்றுத்திறனாளிகள் மீதான புரிதலையும் சகிப்புத்தன்மையையும் அதிகரிக்கும்'', என்றார் அவர்.

இன்று திங்கட்கிழமை மேலவையில் நடைபெற்ற கேள்வி பதில் நேரத்தின் போது அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)