துரின், 12 நவம்பர் (பெர்னாமா) -- இத்தாலி துரினில் நடந்த ஏ.டி.பி டென்னிஸ் போட்டியில் கணித்தது போலவே வெற்றியாளராக வாகை சூடினார் உலகின் முதன் நிலை ஆட்டக்காரர் ஜனிக் சின்னர்.
நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் அவர் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினோரை நேரடி செட்களில் தோற்கடித்து கிண்ணத்தை கைப்பற்றினார்.
ஷாங்காயில் பட்டத்தை வென்றதில் இருந்து நான்கு வாரங்களாக எந்தவொரு போட்டியிலும் களமிறங்காத சின்னர், இந்த ஏ.டி.பி டென்னிஸ் போட்டியில் தனி முத்திரையை பதித்துள்ளார்.
உபசரணை நாட்டின் ஆட்டக்காரரான அவர் 6-3, 6-4 என்று எளிதில் இரு செட்களையும் வென்று வெற்றியாளரானார்.
2023-ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்த மதிப்புமிக்க போட்டியில் நோவக் ஜோகோவிச்சிற்கு எதிராக சின்னர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
சொந்த அரங்கில், ஆதரவாளர்களின் முன்னிலையில், உற்சாகமுடன் விளையாடி கிண்ணத்தை வென்றிருக்கும் 23 வயதான சின்னர் இந்த ஆட்டம் உட்பட எட்டு முறை அலெக்ஸ் டி மினோரை தோற்கடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]