கோலாலம்பூர், 13 நவம்பர் (பெர்னாமா) -- நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் சைனுடின் இன்று காலமானார்.
உடல் நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி தமது 86-வது வயதில் இயற்கை எய்தியதை, அவரது வழக்கறிஞர் டத்தோ டாக்டர் குர்டியான் சிங் நிஜார் உறுதிப்படுத்தினார்.
துன் டாய்ம் சைனுடின் கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாக குர்டியான் சிங் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அசுந்தா மருத்துவமனை ஒப்படைத்த மருத்துவ அறிக்கையின் படி, இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கி மறைந்த துன் டாய்ம், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் மோசமான விளைவால் அவருக்கு மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
1984 முதல் 1991 வரை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது நிர்வாகத்தின் கீழ் மலேசியப் பொருளாதாரத்தை நிர்வகிப்பதிலும் செயல்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றிய துன் டாய்ம் இரண்டு முறை நிதியமைச்சராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலாலம்பூரில் உள்ள புக்கிட் கியாரா 1 இஸ்லாமிய மையத்து கொள்ளையில் துன் டாய்மின் உடல் மாலையில் அடக்கம் செய்யப்படுகிறது.
அவருக்கு இறுதி மரியாதை செலுத்த அவரது குடும்பத்தினர், அரசியல் பிரமுகர்கள் என்று அதிகமானோர் அங்கு ஒன்று கூடினர்.
கெடா அலோஸ் ஸ்டாரைப் பூர்வீகமாகக் கொண்ட துன் டாய்ம், கடந்த 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி 13 உடன் பிறப்புகளில் இளையவராகப் பிறந்தார்.
பேராக், செபாங்கில் தமது ஆரம்பக் கல்வியை முடித்த இவர், இடைநிலைக் கல்வியை கெடா, சுல்தான் அப்துல் ஹமிட் கல்லூரியிலும், பின்னர் உயர்க்கல்வியை பினாங்கு, St Xavier கழகத்திலும் கற்று முடித்தார்.
அம்னோவின் மூலம் தமது அரசியல் பிரவேசத்தைத் தொடங்கிய துன் டாய்ம் 1980-ஆம் ஆண்டில் அக்கட்சியின் பொருளாளராகவும் பொறுப்பு வகித்தார்.
அதே ஆண்டில், செனட்டர் அங்கீகாரம் கிடைத்தது முதல் அரசியலில் பெரிய வளர்ச்சியைக் கண்டார்.
1982-டில் சொந்த மாநிலத்திலேயே கோலா மூடா நாடாளுமன்ற உறுப்பினராக துன் டாய்ம் தேர்வானார்.
1985ஆம் ஆண்டு நிதியமைச்சராக பதவியும் ஏற்றார்.
1997 முதல் 1998 வரையில் ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடியின் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பது தொடர்பில் அப்போதைய பிரதமர் துன் மகாதீரின் வேண்டுகோளுக்கிணங்க, 1991ஆம் ஆண்டு அவர் தமது சொந்த விருப்பத்தின் பேரில் அமைச்சரவையை விட்டு வெளியேறினார்.
துன் டாக்டர் மகாதீரின் வலது கரமாக அறியப்படும் துன் டாய்ம், கடந்த 2001 ஆம் ஆண்டு தேசிய அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)