உலகம்

ஜி20 சமூக உச்சநிலை மாநாட்டின் இறுதி ஆவணங்களை அதிபர் லூயிஸ் பெற்றார்

17/11/2024 02:17 PM

ரியோ டி ஜெனிரோ, 17 நவம்பர் (பெர்னாமா) --   பிரேசில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் முதலாவது ஜி20 சமூக உச்சநிலை மாநாட்டின் இறுதி ஆவணங்களை, அந்நாட்டின் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பெற்றார்.

உலகின் 19 பெரிய பொருளாதார நாடுகளைச் சேர்ந்த பொது மக்களின் பிரதிநிதிகளின் பரிந்துரைகளை இந்த ஆவணம் ஒன்றிணைத்துள்ளது.

''73 கோடியே 30 லட்சம் மக்கள் ஒவ்வொரு நாள் இரவும் உணவின்றி உறங்கச் செல்வதால் ஜி20 தினசரி நடைபெற வேண்டும். கடந்தாண்டில் ஆயுதங்களுக்காக 24 லட்சம் கோடி அமெரிக்க டாலரை உலகம் செலவிட்டது. அதோடு, சிற்றுண்டி, மதிய மற்றும் இரவு உணவு தேவைப்படும் மக்களுக்கு வழங்க கிட்டத்தட்ட எதையும் செலவளிக்கவில்லை'', என்று அவர் கூறினார்.

பொது மக்களின் பிரதிநிதிகள் வாசித்த சமூக G20 இன் இறுதிப் பிரகடனத்தில் செல்வந்தர்களின் முற்போக்கான வரிவிதிப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

அதோடு, தவறான தகவல்களை ஊக்குவிக்கும் தீவிர வலதுசாரி தரப்பினரால் ஜனநாயகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல் பற்றிய கவலைகள் குறித்தும் அதில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

உலகளாவிய அளவில் தெற்கில் உள்ள நாடுகளின் அதிக பங்கேற்புடன், ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் அப்பிரகடனத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)