கோலாலம்பூர், 19 நவம்பர் (பெர்னாமா) - பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் போக்குவரத்து முறைகளுக்கு QR எனப்படும் விரைவு பதில் குறியீட்டை பயன்படுத்துவதற்கான கொள்முதல் செயல்முறை 2024 நிதி ஆண்டில் இறுதி செய்யப்படும்.
ஜோகூர், சுல்தான் இஸ்கண்டார் கட்டிடத்தின் சுங்கம், குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தல் வளாகம் உட்பட சுல்தான் அபு பாக்கார் வளாகத்திலும், அந்த QR குறியீட்டு அமைப்பை பயன்படுத்தும் நோக்கத்திற்காக இரண்டு கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.
"இரண்டு போக்குவரத்து முறைகளில் இதன் அமலாக்கத்தை முன்னதாக உறுதி செய்தோம். அதாவது QR குறியீடுகளைப் பயன்படுத்தும் பேருந்து பயணிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இனி கடப்பிதழ் முத்திரையைப் பெறத் தேவையில்லை. இது ஜூன் முதலாம் தேதியிலிருந்து நவம்பர் 30-ஆம் தேதி வரை அமலில் உள்ளது. எனவே இந்த நிதியாண்டில் கொள்முதல் நோக்கத்திற்காகக் குத்தகையாளர்களை நியமிப்பதையும் இறுதி செய்வோம். இதற்காக இரண்டு கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது," என்றார் அவர்.
போக்குவரத்தை எளிதாக்க QR பயன்பாடு குறித்து இன்று மக்களவையில் எழுப்பப்பட்டக் கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
நேற்று, புக்கிட் அமானில் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப் தலைமையேற்ற ஜோகூர் பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கையாளும் செயற்குழு கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டதாக டத்தோ ஶ்ரீ சைஃபுடின் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)