பத்து காவான், 19 நவம்பர் (பெர்னாமா) - பூலாவ் அமான் தேசியப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளிக்குச் சென்று வருவதற்கு இலகுவாக கடந்த வாரம் புதிய படகு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த பழைய படகுக்குப் பதிலாக இரண்டு லட்சத்து 18,000 ரிங்கிட் மதிப்பிலான அந்த படகு அப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர்த்து 30,000 ரிங்கிட் பெறுமானமுள்ள படகை ஏற்றிச் செல்லும் இழுவண்டி ஒன்றும் அப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அப்படகை கொள்முதல் செய்வதற்கு மொத்தம் இரண்டு லட்சத்து 48,097 ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது.
அப்படகின் மாதிரி சாவியை கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக், பூலாவ் அமான் தேசியப் பள்ளியின் தலைமையாசிரியர் ரொஹாயு இப்ராஹிமிடம் கடந்த சனிக்கிழமை ஒப்படைத்தார்.
அதோடு, அப்பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கும் அவர் உதவித் தொகையையும் வழங்கினார்.
கல்வி அணுகல் மற்றும் தளவாடங்கள் தொடர்பான சிக்கல்களை முன்னிறுத்தி, எவரும் ஒதுக்கப்படாமல் இருப்பதை அமைச்சு எப்போதும் உறுதி செய்து வருவதையும் Fadhlina சுட்டிக் காட்டினார்.
"பள்ளித் தளவாடங்கள் மற்றும் கல்வி அணுகல் ஆகியவை குறித்து, கல்வியமைச்சு அளவில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது மிகப் பெரிய அர்ப்பணிப்பு உணர்வையும் புலப்படுத்துகிறது," என்றார் அவர்.
மேலும், ஒருங்கிணைக்கப்பட்ட, ஆக்கப்பூர்வ மற்றும் புத்தாக்க முறையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக்கூடிய உயர் இலக்கவியல் கல்வியறிவு பெற்ற மாணவர்களை உருவாக்கும் நோக்கில் பூலாவ் அமான் தேசியப் பள்ளியை இலக்கவியல் பள்ளியாகப் பெயரிட ஜேபிஎன் மூலம் கல்வியமைச்சு பரிசீலித்து வருவதாகவும் ஃபட்லினா கூறினார்.
அப்பள்ளியில் தற்போது மொத்தம் 26 மாணவர்களும் எட்டு ஆசிரியர்களும் இருக்கின்றனர்.
அவர்களில் ஆறு மாணவர்களும் ஏழு ஆசிரியர்களும் PULAU AMAN பகுதிக்கு வெளியில் இருப்பதால், நாள்தோறும் படகு மூலமாக பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)