ஜார்ஜ்டவுன், 19 நவம்பர் (பெர்னாமா) - 'வேப்' எனப்படும் மின்னியல் சிகரெட் உபயோகத்தை அரசாங்கம் முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று, பகாங் மாநில சுல்தான்...
அல் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தபா பில்லா ஷாவின் வலியுறுத்தலை சுகாதார அமைச்சால் பின்பற்ற முடியும் என்று பினாங்கு மாநில பயனீட்டாளர் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
எதிர்கால சந்ததியினரின் நலனில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சுல்தான் முன்மொழிந்துள்ள இப்பரிந்துரையை தமது தரப்பு ஆதரிப்பதாக அச்சங்கங்கத்தின் ஆய்வு மற்றும் கல்விப் பிரிவு அதிகாரி என்.வி. சுப்பாராவ் தெரிவித்தார்.
"இவ்வாண்டு மட்டும் ஏறக்குறைய 12,000 பேர் பள்ளி வளாகத்தில் வேப் புகைத்த காரணத்திற்காக பிடிபட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது. அதேபோல 12,252 பள்ளி மாணவர்கள் வேப் புகைத்ததால் பிடிபட்டிருக்கின்றார்கள்," என்று அவர் தகவல் கூறினார்.
ஆகக் கடைசியாக பெர்லிஸ் மாநிலத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் அதிகளவில் 'வேப்' புகைத்ததன் காரணமாக மாடியிலிருந்து விழுந்து பலத்த காயங்களுக்கு ஆளானதையும் சுப்பாராவ் சுட்டிக்காட்டினார்.
பகாங் மாநிலத்தில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருள் பழக்கத்தை தடுக்கும் முதல்கட்ட முயற்சியாகவும், 'வேப்' பயன்பாட்டுக்கு தடை விதிப்பதற்கு பகாங் சுல்தான் குரல் எழுப்பியுள்ளதாக அவர் கூறினார்.
"இது உண்மையில் நாம் வரவேற்கக்கூடிய ஓர் ஆரோக்கியமான கோரிக்கையாகும். தற்போது அதிகமான மாணவர்கள், சிறுவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் யுவதிகளும் கூட மின்னியல் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இந்த எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது," என்றார் அவர்.
மேலும், சில பொறுப்பற்ற வியாபாரிகள் 'வேப்' திரவத்தில் போதைப் பொருளைக் கலந்து விற்பதாகவும் அதை வாங்கிப் பயன்படுத்தும் மாணவர்களும் இளைஞர்களும் அப்போதைக்கு அடிமையாகுவதாகவும் சுப்பாராவ் கவலைத் தெரிவித்தார்.
இதனிடையே, வளர்ச்சி அடைந்த பல நாடுகளில் மின்னியல் சிகரெட் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை போன்று இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு மலேசியாவிலும் அதன் பயன்பாட்டிற்கு சுகாதார அமைச்சு தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)