புத்ராஜெயா, 19 நவம்பர் (பெர்னாமா) - மலேசியாவில் கல்வி பயில்வதற்காக தாய்லாந்திலிருந்து சுங்கை கோலோக் ஆற்றைக் கடந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் குறித்த தகவலை கல்வி அமைச்சு முழுமையாக விசாரிக்கும்.
சம்பந்தபட்ட அம்மாணவர்கள் மலேசிய குடியுறுமை பெற்றவர்களாக இருந்தால் எவ்வித பிரச்சினையும் எழாது என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.
சுமார் 500 மாணவர்கள் தாய்லாந்திலிருந்து வருவதாக கூறப்படும் நிலையில், அந்த எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கல்வி அமைச்சு இவ்விவகாரத்தை தீவிரமாக கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
"இந்த பிள்ளைகள் மலேசிய குடிமக்களாக இருந்தால், அவர்கள் மலேசியாவில் பள்ளிக்குச் செல்ல வேண்டும், மேலும் ஆற்றைக் கடப்பதில் அவர்களின் பாதுகாப்பு அம்சத்தில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. ஆனால் அதில் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் அதனை நாங்கள் விசாரித்து கவனத்தில் கொள்கிறோம்," என்றார் அவர்.
தாய்லாந்தில் இருந்து சுமார் 500 மாணவர்கள், தினமும் மலேசியாவில் பள்ளிக்குச் செல்வதற்காக சுங்கை கோலோக் ஆற்றைக் கடக்க சட்டவிரோத வழிகளைப் பயன்படுத்துவதாக ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே, மலேசியா-தாய்லாந்து எல்லையை கடக்க சுங்கை கோலோக் ஆற்றின் குறுக்கே சட்டவிரோத வழியைப் பயன்படுத்தினால் வரும் டிசம்பர் முதலாம் தேதி தொடங்கி கைது செய்யப்படுவார்கள் என்று கிளந்தான் போலீசார் நேற்று அறிவித்திருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)