கோலாலம்பூர், 19 நவம்பர் (பெர்னாமா) -- இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் முதலாம் தேதி வரையில், இணையப் பகடிவதை தொடர்பில், மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் எம்சிஎம்சி, 8,339 புகார்களை பெற்றுள்ள நிலையில், அதில் 27 சம்பவங்கள் தினசரி பதிவாகி உள்ளது.
அவ்வெண்ணிக்கை, முன்பை விட உயர்ந்திருப்பதால், பாதுகாப்பான இணைய சூழலை வழங்குவதில், சமூக ஊடக உரிம அமலாக்கத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுவதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
''உதாரணத்திற்கு கடந்த ஆண்டு முகலூலில், வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அறிவிக்கப்பட்ட இணைய மோசடியினால், மலேசியர்களுக்கு ஏற்பட்ட மொத்த இழப்புத் தொகை 43 கோடியே 20 லட்சம் ரிங்கிட் ஆகும். மாறாக, 2023-இல் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில், சமூக ஊடகங்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 525 ஆகும்'', என்றார் அவர்.
புத்தாக்கம் மற்றும் அதன் வளர்ச்சியைத் தடுக்காமல் இணைய குற்றச் செயல்களை கையாள்வதற்கு, உரிமம் வழங்கும் கட்டமைப்பை அமல்படுத்துவதன் முதன்மை நோக்கம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
உரிமம் வழங்கும் நடவடிக்கை, பயனர்களை பாதிக்காது, மாறாக,எம்சிஎம்சியிலிருந்து உரிமம் பெற வேண்டிய சேவை வழங்குநர்களை மட்டுமே அது உட்படுத்தியிருக்கும்.
அதேவேளையில், 2025-ஆம் ஆண்டுக்குள் உரிமம் பெறத் தவறிய சமூக ஊடக தளங்களை மூடுவதற்கான எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)