கோலாலம்பூர், 19 நவம்பர் (பெர்னாமா) -- வாடகை வீடுகளுக்கான போலி முகவர்களினால் பாதிக்கப்பட்ட தனிபர்கள் அமலாக்க தரப்பினரிடம் புகார் அளிக்க முன் வர வேண்டும்.
மக்கள் அளிக்கும் புகார்களைக் கொண்டே சம்பந்தப்பட்ட மோசடி சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள முடியும் என்று மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளனமான ஃபொம்கா தெரிவித்துள்ளது.
சமீப காலமாக வாடகை வீடுகளுக்காக செயல்படும் போலி முகவர்களை உட்படுத்திய மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இது தொடர்பில் பொது மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பாதிக்கப்பட்டவர்கள் தயக்கம் காட்டமல் புகார் அளிக்க முன் வர வேண்டும் என்று ஃபொம்காவின் தலைமை செயல்முறை அதிகாரி முனைவர் சரவணன் தம்பிராஜா அறிவுறுத்தினார்.
''பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் NSRC எனப்படும் தேசிய மோசடி பதிலளிப்பு மையத்திற்கு 997 என்ற எண்ணுடன் தொடர்புக் கொள்ளலாம். போலீஸ், உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, KPDN, பேங்க் நெகாரா உட்பட அமலாக்க தரப்பினர்களை தொடர்புக் கொள்ளலாம். எந்தவொரு பயனீட்டாளர் சங்கங்களையும் தொடர்புக் கொள்ளலாம்,'' என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட மோசடி தரப்பினர், முகவர்களைப் போல் நடித்து வாடகைக்கு வீடுகளைத் தேடும் நபர்களை ஏமாற்ற முற்படுகின்றனர்.
முதலில் வாடிக்கையாளர்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்புக் கொண்டு, வீட்டை நேரில் பார்ப்பதற்கு தேதிகளை உறுதிப்படுத்தி முன்பணம் செலுத்தும் செயல்முறைகளை மேற்கொள்வர்.
இதனை நம்பி, பணம் செலுத்திய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொது மக்கள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்று சரவணன் கேட்டுக் கொண்டார்.
''முதலில் அந்த முகவரிடம் பேசும் போது நம்பிக்கையானவர்கள் போல் தெரியும். அவர்களுக்கு தனி நிறுவனம் இருப்பது போன்று தெரியும். பணம் செலுத்துவது அல்லது இணைய பணபரிமாற்றம் செய்து முடித்தவுடன் அவர்களை தொடர்பு கொள்ள முடியாது சூழ்நிலை ஏற்படும். சமூக வலைத்தளங்களிலும் அவர்களை தொடர்புக் கொள்ள முடியாத நிலை ஏற்படும்,'' என்றார் அவர்.
இதனிடையே, வாடகை வீடு முகவர்களின் தகவல்களை உறுதிப்படுத்த செயல்முறைகள் இருப்பதாக கூறிய சரவணன் முன்னெச்சரிக்கையாக இருக்கும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொண்டார்.
''அவர்கள் உண்மையாக முகவர்கள்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களின் நிறுவன தகவல்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எஸ்.எஸ்.எம், நிறுவன நிர்வாக இயக்குநர்கள் இருக்கின்றார்களா என்பதை உறுதிப்படுத்துங்கள். பணத்தை பரிமாற்றம் செய்வதற்கு முன்னதாக அவர்களது வங்கி கணக்கு எண்களை SEMAK MULE-இல் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதில் கண்டுப்பிடிக்க முடியும். அவர்களுடன் மேற்கொள்ளும் உரையாடல்கள் அல்லது புலனங்களை படம் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்,'' என்றார் அவர்.
மேலும், இது தொடர்பில் ஆலோசனை தேவைப்படும் அல்லது மோசடியை புகார் அளிக்க விரும்பும் பயனீட்டாளர்கள் ஃபொம்காவை தொடர்புக் கொள்ளலாம்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)