உலகம்

காசா & லெபனானில் நிகழும் மோசமான சூழல் குறித்து ஜி20 தலைவர்கள் கவலை 

19/11/2024 05:13 PM

ரியோ டி ஜெனிரோ, 19 நவம்பர் (பெர்னாமா) - காசா மற்றும் லெபனானில் நிகழும் மிக மோசமான மனிதாபிமானம் அற்ற சூழல் குறித்து ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.

மனிதாபிமான உதவிகளை விரிவுபடுத்துவது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் பெரிய அளவிலான உதவிகளை வழங்குவதற்கு தடையாக இருக்கும் அனைத்தையும் நீக்குவது ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

தொடர்ச்சியான மோதலினால் உண்டாகும் கடுமையான துன்புறுத்தல் மற்றும் அதனால் ஏற்படும் பாதகமான விளைவுகளையும் ஜி20 தலைவர்கள் சுட்டிக்காட்டினர். 

மேலும், தங்களின் எதிர்காலத்தை சுயமாக தீர்மாணிக்கக் கூடிய உரிமையை பாலஸ்தீனிய மக்கள் கொண்டிருப்பதாகவும் அவர்கள் வலியுறுத்தினர். 

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு மன்றத்தின் தீர்மானங்களுக்கு ஏற்ப காசா மற்றும் லெபனான் முழுவதும் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அம்மக்கள் மீண்டும் தங்களின் வீடுகளுக்கு பாதுகாப்பான சூழலில் திரும்ப வேண்டும் என்றும் ஜி20 தலைவர்கள் கூறுகின்றனர். 

உலகளாவிய சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்ளவும் வலுவான நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேம்படுத்தவும் பிரேசில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஜி20 உச்சநிலை மாநாட்டில் உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)