பொது

8 ஆண்டுகளில் மருந்துகள் வாங்கும் நடவடிக்கை 30% அதிகரிப்பு

19/11/2024 07:16 PM

கோலாலம்பூர், 19 நவம்பர் (பெர்னாமா) - கடந்த எட்டு ஆண்டுகளில் மருந்துகள் வாங்குவதற்கான செலவு சுமார் 30 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார். 

கடந்த 2015-ஆம் ஆண்டு மருந்துகள் வாங்குவதற்கான செலவு 23 லட்சம் ரிங்கிட்டாக இருந்த நிலையில் கடந்தாண்டு அது 30 லட்சம் ரிங்கிட்டாக அதிகரித்தது.

மருந்துகளின் விலை அதிகரிப்பு, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் புதிய மருந்துகளின் பயன்பாடு போன்றவற்றுக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

மருந்து சேவைகள் திட்ட புள்ளிவிவர அறிக்கையின்படி, 2015 முதல் 2023ஆம் ஆண்டு வரை மருந்து வாங்குவதற்கு 2,325 கோடி ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது.

மருந்துகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான செலவினங்களின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் என்றும் சுகாதார அமைச்சு கணக்கிட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு தொடங்கி அரசு மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சையகங்களில் மருந்துகளை வாங்குவதற்கான மொத்த ஆண்டு செலவு மற்றும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான எதிர்பார்ப்புகள் குறித்த அஸ்லி யூசோப்பின் கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)