பொது

மின்னியல் சிகரெட்டிற்கு தடை விதிக்கப் பரிந்துரை; எம்.எம்.ஏ ஆதரவு

21/11/2024 08:01 PM

குவாந்தான், 21 நவம்பர் (பெர்னாமா) -- மின்னியல் சிகரெட்டிற்கு தடை விதிக்குமாறு பகாங் சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா அழைப்பு விடுத்துள்ளததற்கு மலேசிய மருத்துவ சங்கம், எம்.எம்.ஏ வலுவான ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட அப்பரிந்துரையைக் கருத்தில் கொள்ளுமாறும் அச்சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

சுகாதாரத்திற்கு மீள முடியாத பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்னர், இப்பிரச்சனை உடனடியாகக் கையாளப்பட வேண்டும் என்று அதன் தலைவர் டத்தோ டாக்டர் கல்விந்தர் சிங் கைரா தெரிவித்தார்.

நாட்டில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மின்னியல் சிகரெட் பயன்பாடு கவலையளிப்பதோடு அதை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

''சுவாசப் பிரச்சனை, கடுமையான நுரையீரல் நோய் மற்றும் பிற உறுப்புகளுக்கு பாதிப்பு போன்ற மோசமான உடல்நலப் பிரச்சினைகளுக்கு மின்னியல் சிகரெட் வழிவகுக்கும் என்பதால் நாங்கள் இவ்விவகாரத்தில் அக்கறை கொண்டுள்ளோம். நேரடியாகவும் மறைமுகமாகவும் மின்னியல் சிகரெட்டை பயன்படுத்துவது, போதைப்பொருள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு அடிமையாவதற்கு வழிவகுக்கும்,'' என்றார் அவர்.

2020ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, 2,807 EVALI எனப்படும் மின்னியல் சிகரெட் அல்லது வேப் பொருட்கள் தொடர்புடைய நுரையீரல் பாதிப்பு சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தரவுகள் காட்டுகின்றன.

மலேசியாவைப் பொருத்தவரை 2019ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை 41 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)