பொது

மின்னியல் சிகரெட் பிரச்சனையைக் கையாள அனைத்து தரப்பினரின் பங்களிப்பும் அவசியம்

20/11/2024 06:15 PM

கோலாலம்பூர், 20 நவம்பர் (பெர்னாமா) -- பள்ளி மாணவர்களிடையே எளிதில் கிடைக்கக்கூடிய மற்றும் கட்டுப்படுத்த முடியாத மின்னியல் சிகரெட் பிரச்சினையைக் கல்வி அமைச்சு கடுமையாகக் கருதுகிறது.

பள்ளி மாணவர்களிடையே நிலவும் மின்னியல் சிகரெட் பிரச்சனை அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதால், அதனைக் கையாள்வதற்கான முயற்சிகளுக்கு அனைத்து தரப்பினரின், குறிப்பாக பெற்றோரின் பங்களிப்பு அவசியம் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறியுள்ளார்.

'' அவர்களின் பிள்ளைகளைக் கண்காணிக்க குறிப்பாக அதனை அவர்கள் பெறும் நடவடிக்கைகள், பள்ளிக்கு வெளியே அவர்களின் செயல்பாடுகள் எப்படி பொருட்களைப் பெறுகிறார்கள் போன்றவைக் குறித்து எங்களிடம் தகவல் இல்லை. இதற்கு பெற்றோரின் ஆதரவும் உதவியும் எங்களுக்கு இன்னும் தேவை. ஆனால், ஒருவேளை அவர்கள் தவறு செய்து கண்டறிந்து பள்ளி விதிகளை மீறினால் பள்ளி அளவில் வழிகாட்டுதல்கள் மற்றும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் உள்ளன, '' என்றார் அவர்.

கோலாலம்பூரில், இன்று செயின்ட் மேரி தேசிய இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் சமூக கல்வி வழிகாட்டுதல்கள் தொடக்க விழாவில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் ஃபட்லினா சிடேக் அதனைக் கூறினார்.

முன்னதாக, பெர்லிஸ் கங்காரில் இரண்டாம் படிவ மாணவர் ஒருவர் மின்னியல் சிகரெட் பயன்படுத்தியதால் பள்ளியின் கூரையிலிருந்து விழுந்து காயமடைந்ததாக நம்பப்படுவதாக ஊடகங்கள் செய்து வெளியிட்டது தொடர்பில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

பள்ளி கட்டிடத்தில் காலை 11 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக பெர்லிஸ் கல்வி இயக்குனர்  ரோஸ் அசா சே அரிஃபின் தெரிவித்துள்ளார்.

பள்ளியின் இடைவேளை நேரத்தில், அந்த மாணவர் வகுப்பில் மின்னியல் சிகரெட் புகைபிடித்ததாகவும், அதனால் மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)