கோலாலம்பூர், 22 நவம்பர் (பெர்னாமா) - பாடுவதில் ஆர்வமுடைய இளைய சமூகத்தினர் பெரும்பாலோர், கேள்வி ஞானத்திலேயே தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால், அதையும் கடந்து முறையாக சங்கீதம் கற்றுக்கொண்டு நிகழ்ச்சிகளிலோ அல்லது போட்டிகளிலோ கலந்து கொண்டால், அங்கு திறமையைக் காட்டிலும் பின்னணிக்கும் பிரபலத்திற்கும் மட்டுமே முக்கியதுவம் வழங்கப்படுவதாக வளரும் கலைஞரான திவ்யா சந்திரன் கூறுகின்றார்.
அத்தகைய சூழ்நிலைகள் தங்களைப் போன்ற இசை ஆர்வலர்களை பெரிதும் பாதிப்பதாகவும் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியாக பணிபுரியும் 27 வயதுடைய திவ்யா சந்திரன் தெரிவித்தார்.
''முதன் முறையாக நான் மேடை ஏறியபோது, எனக்கு ஒலிவாங்கியை (மைக்) சரிபார்க்கத் தெரியாது. அதை எப்படி பிடிக்க வேண்டும் என்று கூட தெரியாது. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், உங்கள் பின்னணி என்ன, ஏதும் போட்டிகளில் கலந்து கொண்டீர்களா என்றெல்லா கேட்டார்கள். ஆக என்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு என் பெயரை மட்டுமோ அல்லது எனது திறமையை மட்டும் கூறினால் போதாது என்பதை உணர்ந்து கொண்டேன்,''வ் என்று அவர் கூறினார்.
சிலாங்கூர், காஜாங்கைச் சேர்ந்த திவ்யா வீட்டின் இரண்டு பிள்ளைகளில் மூத்தவராவார்.
தமது தந்தையும் சித்தார் கலைஞருமான சந்திரனின் தூண்டுதலால், எட்டு வயதில் முறைப்படி சங்கீதம் பயிலத் தொடங்கியுள்ளார்.
சிறுவயதில் முதல் போட்டியில், அடைந்த தோல்வியே, அவரை அடுத்தடுத்த போட்டிகளில் பட்டைத் தீட்டி, முன்னேற்றி மிளிர வைப்பதற்கு காரணமாகவும் அமைந்துள்ளது.
இப்படி பல போட்டிகளில் கலந்து வாகை சூடியிருந்தாலும், இன்றளவும் கலைத் துறையில் குறிப்பாக, மேடைகளில் பாடுவதற்கு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
கிடைத்தாலும் அதிலும் சவால்கள் அவருக்கு இப்படியாக...
''நாம் ஒருவரை அணுகும் போது அவர்கள் நமக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்றால் அதில் ஏதும் உள்நோக்கம் இருக்கிறதா என்பதையும் அறிய வேண்டும். ஏனெனில் இப்போது நிறைய மோசடிகள் நிகழ்கின்றன. மேலும் நாம் செல்லும் இடம் பாதுகாப்பானதா என்பது முக்கியம். இவ்வகைப் பிரச்சனைகளைக் களைய நான் செல்லும் அனைத்து இடத்திற்கும் என் தாயாரை அழைத்து சென்று விடுவேன்,'' என்று குறிப்பிட்டார்.
அதிலும் சில ஏற்பாட்டாளர்கள் பாட அழைத்து, பின்னர் பணம் கொடுப்பதற்கு மிகவும் தயங்குவது மற்றொரு வேதனைக்குரியது என்று அவர் குறிப்பிட்டார்.
''நிகழ்ச்சிக்கு பாடுவதற்கு அழைத்தால் கணிசமான தொகை கேட்பது சாதாரணமான ஒன்று. ஆனால் அவ்வாறு கேட்கும் போது நாங்கள் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறோம். மாறாக நீங்கள் அதற்கு பணம் கேட்பது சரியா என்றெல்லாம் கேட்கிறார்கள்,'' என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்
அதேவேளையில், மலேசியாவில் தமிழ்நாட்டு இசைக்கலைஞர்களுக்கு இசை நிகழ்ச்சிகளைப் படைக்க கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால், உள்ளூர் கலைஞர்களுக்கான வாய்ப்பு குறைவதையும் திவ்யா மறுக்கவில்லை.
ஆற்றலும் திறமையும் இருந்தாலும் வாய்ப்பு என்ற ஒன்று கிடைத்தால் மட்டுமே இளம் கலைஞர்கள் நாட்டில் மிளிர முடியும்.
இல்லையேல் கடைசிவரை சமூக வலைத்தளங்களில் மட்டுமே தங்களின் படைப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டு மக்களைச் சென்று சேர முடிவதாக தமது ஆதங்கத்தை,இன்றைய 'கலை சங்கம்' அங்கத்தில் திவ்யா சந்திரன் பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)