பொது

இவ்வாண்டின் பத்து மாதத்தில் 21 கோடி ரிங்கிட் மதிப்பிலான பொருட்களைப் பறிமுதல் செய்தது பிபிஎம்

23/11/2024 06:42 PM

லாஹாட் டத்து, 23 நவம்பர் (பெர்னாமா) -- இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில், 21 கோடி ரிங்கிட் மதிப்பிலான பொருட்களைப் பறிமுதல் செய்ததன் வழியாக, 7 ஆயிரத்து 103 சம்பவங்களை முறியடித்து கடல்சார் போலீஸ் படை, பிபிஎம் சிறந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

போதைப்பொருள், சிகரெட், மதுபானம் பறிமுதல், பெட்ரோல், டீசல், நிலம் மற்றும் கடல் வனவிலங்குகள் கடத்தல் போன்றவற்றைக் கைப்பற்றி வெற்றி பெற்றதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் கூறினார்.

"அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் தலைமைத்துவத்தின் சார்பாக, கடல்சார் போலீஸ் படை பி.டி.ஆர்.எம்குள் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் தற்காத்து வருகிறோம். இது, மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (APMM) கீழ் வைக்கப்படலாம், " என்றார் அவர்.

சனிக்கிழமை, லாஹாட் டத்துவில் உள்ள பிபிஎம் தலைமையகத்தில் நடைபெற்ற 77வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் ரஸாருடின் அவ்வாறு தெரிவித்தார்.

சபா மாநிலத்தில் கடத்தல் வழக்குகளைக் குறைப்பதில் பி.டி.ஆர்.எம் வெற்றி பெற்றுள்ளதாக கூறிய அவர், 2020 முதல் தற்போது வரை, மாநிலத்தில் கடத்தல் மற்றும் பிணைப்பணம் கோரும் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)