கோலாலம்பூர், 29 நவம்பர் (பெர்னாமா) -- நாட்டின் சில மாநிலங்களில் இடைவிடாது மழை பெய்து வருகிறது.
இதனால், வெள்ள நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக கிளாந்தானில் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாலை நிலவரப்படி, கிளந்தான் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65,993-ஐ எட்டியுள்ளது.
அவர்கள் அனைவரும் 244 தற்காலி நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கிளந்தானில் உள்ள பல முக்கிய ஆறுகள் அபாய அளவை கடந்துள்ளதாக நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனிடையே, திரெங்கானுவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 22, 511 பேர், 228 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
செத்தியூவில் 4,544 பேர், உலு திரெங்கானுவில் 4 ,152 பேர், கெமாமானில் ஆயிரத்து 519 பேர், டூங்கூனில் 703 பேர், மாராங்கில் 665 பேர் மற்றும் கோல நெருசில் 61 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருப்பதாக மாநில பேரிடர் நிர்வகிப்பு செயற்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
மத்திய மற்றும் மாநில சாலைகள் உட்பட சுமார் 36 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக மாநில பொதுப்பணி துறை அறிவித்துள்ளது.
மற்றொரு நிலவரத்தில்,நெகிரி செம்பிலானில் 433 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 593 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோல பிலா, தம்பின் மற்றும் ஜெம்போல் ஆகிய மாவட்டங்களில் உள்ள 13 தற்காலிக நிவாரண மையங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சிலாங்கூரில் 77 குடும்பங்களைச் சேர்ந்த 312 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாலை நிலவரப்படி, கிள்ளான், மேரு பகுதி ஆற்றில் நீர் மட்டம் அபாய அளவை கடந்துள்ளதாக மாநில நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை தெரிவித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)