அரசியல்

தாஜுடின் பதவியை இடைநீக்கம் செய்யும் முடிவை அம்னோ மீட்டுக் கொண்டது

01/12/2024 06:08 PM

ஷா ஆலாம், 01 டிசம்பர் (பெர்னாமா) - அம்னோவின் மீது டத்தோ ஶ்ரீ தாஜுடின் அப்துல் ரஹ்மானின் ஆர்வத்தையும் அர்பணிப்பையும் கருத்தில் கொண்டு அவரின் உறுப்பினர் பதவியை இடைநீக்கம் செய்யும் முடிவை கட்சி மீட்டுக் கொண்டுள்ளது.

பாசிர் சாலாக்கின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், அம்னோ உச்சமன்றத்திற்கு நான்கு முறை மேல்முறையீட்டு கடிதம் அனுப்பியிருப்பதாகவும் கடந்த சில இடைத்தேர்தல்களில் தேசிய முன்னணிக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியிருப்பதாகவும் அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

''டத்தோ ஶ்ரீ தஜூடின் நான்கு முறை மேல்முறையீட்டு கடிதம் அனுப்பியிருக்கிறார். நெங்கிரி மற்றும் மஹ்கோத்தா இடைத்தேர்தல்களில் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த அம்னோ பொது பேரவைக்கும் வருகை புரிந்திருக்கின்றார். எனவே, அவரின் மேல்முறையீட்டை உச்சமன்றம் ஏன் ஏற்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை,'' என்றார் அவர்.

கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் இதர உறுப்பினர்களுக்கும் இதேபோன்று தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினால் அதேபோல முடிவை எடுக்கலாம் என்றும் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் விவரித்தார்.

முன்னதாக, கட்சியை விமர்சித்ததற்காக தாஜுடின் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி ஆறு ஆண்டுகளுக்கு உறுப்பினர் பதிவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)