கோலா சிலாங்கூர், 11 ஜனவரி (பெர்னாமா) -- நாட்டில் வெங்காயம் பயிரிடும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், அரசாங்கத்தினால் 30 கோடி ரிங்கிட்டை சேமிக்க முடியும்.
தற்போது, சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள ROSE வகை சிறிய வெங்காயம் பயிரிடும் திட்டத்தினால், ஒரு சதுர மீட்டருக்கு ஏறக்குறைய நான்கு டன் வரை அறுவடை செய்ய முடியும் என்று விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தெரிவித்தார்.
இந்த இலக்கை அடைய, விவசாயம் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு, இவ்வாண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டிலோ சிறிய வெங்காயத்தின் விதைகள் விநியோகிக்கப்படும் என்று அவர் கூறினார்.
"பயனீட்டாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மலேசியா 2021-ஆம் ஆண்டில் 90 கோடியே 25 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 484,867 மெட்ரிக் டன்களை (வெங்காயம்) இறக்குமதி செய்தது. மலேசியாவிற்கு வெங்காயத்தை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா, அதைத் தொடர்ந்து சீனா 20% மற்றும் பாகிஸ்தான் 11%," என்று அவர் தெரிவித்தார்.
சனிக்கிழமை, சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் மேற்கொண்டு வரும் சிறிய வெங்காயம் பயிரிடும் திட்டத்தைப் பார்வையிட்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
நாட்டில் சிறிய வெங்காய விநியோகத்தில் 30 விழுக்காட்டைப் பூர்த்தி செய்ய முடிந்தால், வெங்காய இறக்குமதி செய்வதில் 30 கோடி ரிங்கிட் சேமிக்கப்படும் என்று சாபு விளக்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)