சிறப்புச் செய்தி

எதிர்காலத் திட்டங்களுக்கு வழிவகுக்கும் சேமிப்பு பழக்கம்

18/01/2025 08:01 PM

கோலாலம்பூர், 18 ஜனவரி (பெர்னாமா) -- புதிய ஆண்டைத் தொடங்கும் ஒவ்வொரு முறையும் வகுத்து வைத்துள்ள புதிய இலக்கையும் திட்டங்களையும் ஆண்டு இறுதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் இருக்கும்.

அந்த இலக்கை நோக்கி பயணிப்பதற்கு முன்னதாக இதுநாள்வரை செய்த செலவுகள் மற்றும் இனி செய்யக்கூடிய செலவுகளைக் கணக்கிடுவது அவசியமாகும்.

அதுவே, பின்னர் சரியான முறையில் சேமிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்வதற்கும் எதிர்காலத் திட்டங்களுக்கும் ஏற்ப வாழ்க்கையை நகர்த்துவதற்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றார் எகேபிகேவின் பொருளாதார கல்வி பிரிவு நிர்வாகி நிர்மலா சுப்ரமணியம்.

ஒரு தனிநபர் தம்மிடம் உள்ள சேமிப்பு தொகையின் அளவை அவ்வப்போது கணக்கிட்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அச்சேமிப்பு தொகை மக்களின் வங்கிக் கணக்கின் இருப்பதோடு அவசரத் தேவைகளுக்கும் முக்கியப் பங்காற்றும் என்று நிர்மலா சுப்ரமணியம் விவரித்தார்.

''ஒரு அவசர தேவையின் போது உங்களிடம் சேமிப்பு உள்ளதா என்பதை நீங்கள் உறுதி செய்துக் கொள்ள வேண்டும். நிதி அடிப்படையில் உங்களால் அதனை சமாளிக்க முடியுமா என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். அதன் பிறகு, மருத்துவத்திற்கான செலவுகள், காப்புறுதிகள் நமக்கு போதுமானதா என்பதை உறுதிச் செய்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கடன்கள் குறித்து தெளிவாக இருக்க வேண்டும். இருக்கும் கடன்கள் கூடுதலாக உள்ளதா அல்லது கடன்களுக்கு மத்தியில் சமாளிக்க முடியுமா, கடன்களினால் நம்மிடம் இருக்கும் தொகை போதவில்லையா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், '' என்றார் அவர்.

இதுவரை சேமிப்பு பழக்கம் இல்லாதவர்களும் இனி அதை கடைப்பிடிப்பதை ஒரு முக்கியப் பொறுப்பாக கொண்டிருக்க வேண்டும் என்று நிர்மலா அறிவுறுத்தினார்.

இதனிடையே, புதிய ஆண்டில் நிறைய பேருக்கு ஊதிய உயர்வு, போனஸ் தொகை போன்ற சலுகைகள் கிடைத்திருக்கலாம்.

அவற்றை முக்கியத் தேவைகளுக்கு பயன்படுத்த தவறினால் நிதி சுமைக் கூடுமே தவிர குறைய வாய்ப்புகள் இல்லை என்றும் நிர்மலா விளக்குகின்றார்,

''போனஸ் தொகைகளை வைத்திக்கும் போது, புதிய இலக்குகளான முக்கியமான விஷயங்களுக்கு அவை பயன்படுத்தப்படும். இதில் கணக்கிடத் தவறினால், ஒவ்வோர் ஆண்டும் நிதிச் சுமை ஏற்படதான் செய்யும். ஏனென்றால், இதற்கு தீர்வுக் காணாமல், வேறு விஷயங்களுக்கே நிதியை பயன்படுத்துகின்றோம், '' என்றார் அவர்.

இதனிடையே, அதிகமான தொகையில்தான் சேமிக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.

மாறாக, வரவு செலவுகளை திட்டமிட்டு சிறிய தொகையில் சேமிப்பு பழக்கத்தைப் பின்பற்றினாலும் அது எதிர்காலத்தின் உதவியாக நிற்கும் என்று நிர்மலா அறிவுறுத்தினார்.

''சேமிப்பை எடுத்துக் கொண்டால், நிறைய பேர் இது சற்று கடினமாக இருக்கும். ஊதியமே பற்றவில்லை. எவ்வாறு சேமிக்க முடியும் என்ற எண்ணம் கொண்டிருப்பர். இந்த எண்ணம் கண்டிப்பாக இருக்கும். நாம் செயல்படாததற்கு காரணம் மிகப் பெரிய தொகையாக சிந்திக்கின்றோம். சேமிக்க வேண்டும் என்றால் 100 அல்லது 1000 ஆக சேமித்தால்தான் முடியும் என்று அர்த்தமாகாது. ஒரு நாள் ஒரு ரிங்கிட் சேமித்தாலும், அது சேமிப்புதான். அந்த நல்ல பழக்கத்தை இந்த ஆண்டு செயல்படுத்துங்கள், '' என்றார் அவர்.

எதிர்காலம் மற்றும் அவசர செலவுகளுக்குச் சேமிப்பு ஒரு மாற்று வழியாகும்.

எனவே, கடனில்லாத சீரான வாழ்க்கை முறையைப் பின்பற்ற சேமிப்பு பழக்கத்தைக் கடைப்பிடித்து செயல்பட வேண்டும் என்றும் நிர்மலா பெர்னாமா செய்திகளிடம் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)