உலகம்

அலாஸ்காவில் காணாமல் போன  விமானத்தின் பாகங்கள் கண்டுப்பிடிப்பு

08/02/2025 05:59 PM

அமெரிக்கா, 08 பிப்ரவரி (பெர்னாமா) - வியாழக்கிழமை அலாஸ்காவின் மேற்குக் கடற்கரையில் காணாமல் போனதாகக் கூறப்படும் விமானத்தின் பாகங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதை அமெரிக்க கடற்கரை பாதுகாவலர் உறுதிப்படுத்தினர்.

நோம் தென்கிழக்கில் 54 கிலோமீட்டர் தொலைவில் விமானம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதில் இருந்த பத்து பேரும் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.

மோசமான வானிலை மற்றும் அளவான தெரிவுநிலையுடன் சில மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட தேடல் நடவடிக்கைகளுக்குப் பின்னர் அந்த விமானத்தின் பாகங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன.

பேரிங் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான "turboprop Cessna Caravan" ரக விமானம் வியாழக்கிழமை காணாமல் போனதாக அலஸ்கா பொது பாதுகாப்பு துறை தெரிவித்திருந்தது.

உனாலாக்லீட்டில் இருந்து நோம் நோக்கி சென்ற அவ்விமானத்தில் ஒன்பது பயணிகளும் ஒரு விமானியும் பயணித்தனர்.

கடற்கரையில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் விமானத்தின் சமிக்ஞை  காணாமல் போனது.

இச்சம்பவம் குறித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக நோம் தன்னார்வ தீயணைப்பு துறை வெள்ளிக்கிழமை அறிவித்தது.

வர்த்தக விமானத்தில் பயணித்த அனைவரும் இளைஞர்கள் என்று அலஸ்கா போலீசை  சேர்ந்த Leftenan Ben Endres தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)