ஃபுளோரிடா, 19 பிப்ரவரி (பெர்னாமா) -- இந்தியாவிடம் அதிகமான பணம் இருப்பதால், அந்நாட்டில் வாக்கு விழுக்காட்டை அதிகரிக்க, அமெரிக்கா ஏன் பணம் வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் வாக்கு விழுக்காட்டை அதிகரிக்க அமெரிக்கா வழங்கி வந்த இரண்டு கோடியே 10 லட்சம் அமெரிக்க டாலர், அதாவது 182 கோடி இந்திய ரூபாய் நிதியை நிறுத்துவதாக, டிரம்ப் நிர்வாகத்தில் எலோன் மஸ்க் தலைமையிலான அரசாங்க திறன் துறை அறிவித்தது தொடர்பில், டிரம்ப் அவ்வாறு குறிப்பிட்டார்.
''இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க இரண்டு கோடியே 10 லட்சம் டாலர் வழங்கப்பட்டது. சரி, நாங்கள் ஏன் இந்தியாவிற்கு இரண்டு கோடியே 10 லட்சம் டாலர் வழங்குகிறோம்? அவர்களிடம் அதிகமான பணம் இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் அதுவும் (இந்தியா) ஒன்றாகும். அவர்களுடையக் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால் நாங்கள் அங்கு தொழில் செய்ய முடியாது. எனக்கு இந்தியா மீது மிகுந்த மரியாதை உண்டு. எனக்கு பிரதமர் (மோடி) மீது மிகுந்த மரியாதை உண்டு. உங்களுக்குத் தெரியும், அவர் இரண்டு நாட்களுக்கு முன்புதான் இங்கிருந்து புறப்பட்டார். ஆனால், வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க நாங்கள் இரண்டு கோடியே 10 லட்சம் டாலர் வழங்குகிறோம். அது, இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க. இங்கே வாக்காளர் எண்ணிக்கை எப்படி இருக்கிறது?'' என்றார் அவர்.
அண்மையில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)