பொது

நில அமிழ்வில் காணாமல் போன விஜயலக்‌ஷ்மிக்கு இறப்புச் சான்றிதழ் கோரி விண்ணப்பம்

27/02/2026 06:51 PM

கிள்ளான், 27 பிப்ரவரி (பெர்னாமா) -- கடந்த 2024-ஆம் ஆண்டு, கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியா நில அமிழ்வு சம்பவத்தில் காணாமல் போன இந்திய பிரஜையான 48 வயதுடைய ஜி. விஜயலக்‌ஷ்மியின் குடும்பத்தினர், இழப்பீட்டுக் கோரிக்கையை முன்வைப்பதற்காக, அவரின் இறப்புச் சான்றிதழை வழங்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளனர். 

இந்தியா, ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த விஜயலக்‌ஷ்மி இன்னமும் காணாமல் போன நபராக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், அவருக்கான இறப்புச் சான்றிதழ் இதுவரை வெளியிடப்படவில்லை என்று, அவரின் குடும்பத்தை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் முஹமட் சைஃபுல்லா முஹமட் அஸ்மி தெரிவித்தார். 

இறப்புச் சான்றிதழ் வழங்கும் செயல்முறையை எளிதாக்கும் பொருட்டு, கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தேசிய சட்டத்துறை அலுவலகம் மற்றும் தேசிய பதிவுத் துறைக்கு எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தை தங்கள் தரப்பு சமர்ப்பித்ததாக முஹமட் சைஃபுல்லா கூறினார்.

''நாங்கள் விண்ணப்பத்தை அனுப்பியுள்ளோம். தேசிய சட்டத்துறை அலுவலகம் மற்றும் தேசிய பதிவுத் துறைக்கு அனுப்பியுள்ளோம். விஜயலக்‌ஷ்மிக்கு இறப்புச் சான்றிதழை வெளியிடுமாறு விண்ணப்பித்துள்ளோம். ஏனெனில், இவ்விவகாரத்தில் இறப்புச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே எந்தவோர் இழப்பீட்டுக் கோரிக்கையையும் முன்வைக்க முடியும்,'' என்றார் அவர்.  

இதனிடையே, விஜயலக்‌ஷ்மியின் ஒரே மகனான 27 வயதுடைய எம். சூர்யா தற்போது கடுமையான பொருளாதாரச் சிக்கலை எதிர்நோக்கி வருவதால், இந்த இழப்பீடு அவருக்கு பேருதவியாக இருக்கும் என்று அக்குடும்பத்தைப் பிரதிநிதிக்கும் மற்றொரு வழக்கறிஞரான எம். பார்த்திபன் விவரித்தார். 

மேலும், தொடக்கத்தில் வழங்கப்பட்ட 30,000 ரிங்கிட் நிதி, தொடக்கக்கட்ட உதவியாகவே வகைப்படுத்த வேண்டுமே தவிர, அதனை இழப்பீட்டுத் தொகையாகச் சமப்படுத்தக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். 

''தொடக்கக்கட்ட நிதியுதவியாக 30,000 ரிங்கிட் வழங்கப்பட்டது எங்களுக்கு தெரியும். ஆனால், அந்த நிதி போதுமானதா என்பதுதான் தற்போது கேள்வியாக உள்ளது. தொடக்கக்கட்ட நிதியுதவி மற்றும் இழப்பீட்டுத் தொகைக்கு வேறுபாடு உள்ளது,'' என்றார் அவர். 

இந்நிலையில், இழப்பீட்டை பெறும் பொருட்டு தமது தாயாரின் இறப்புச் சான்றிதழ் வழங்கும் செயல்முறையை விரைவுப்படுத்துமாறு, இன்று இது தொடர்பில் சிலாங்கூர், கிள்ளானில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சூர்யா மலேசிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி எட்டு மீட்டர் ஆழத்திற்கு ஏற்பட்ட நில அமிழ்வில் விழுந்து காணாமல் போன விஜயலக்‌ஷ்மியை தேடும் பணி ஒன்பது நாள்களுக்கு நீடித்தது. 

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]